பக்கம்:இன்னொரு உரிமை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178  சு. சமுத்திரம்


"நமக்கெதுக்கு வம்பு? கிளியை வளர்த்துப் பூனை கையில எதுக்குக் கொடுக்கணும்? ஒண்ணு கிடக்க ஒண்ணாகி அவன் ஜெயிலுக்குப் போயிட்டா! நம்ம தமயந்தி கதி, என்னாகும்? கொஞ்சமாவது யோசித்தீரா? மூளையை 'உருக்கு'ப் பண்ணும்!"

சின்னச்சாமி தாடையில் மூளையிருப்பதுபோல் அதைத் தடவி விட்டுக்கொண்டே யோசித்தார். "நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான்."

"ஒருவகையில் இல்ல... எல்லா வகையிலேயும் சரியாத் தான் இருக்கும்."

"உனக்கு இருக்க மூளை எனக்கு வராது பிள்ளே! தெரியாத இடத்துல விழுவுறதவிட தெரிஞ்ச இடத்துல விழுவுறது நல்லது. நம்ம மேலத்தெரு மாடசாமி மவனுக்குக் கேக்கறாங்க, பி. ஏ. படிச்சிருக்கான். சொத்து பத்து இருக்கு. கொடுக்கலாமுன்னு நினைக்கேன்!"

"எவ்வளவு கேக்காங்க?"

"இருபத்தைஞ்சு கழஞ்சியும், இரண்டாயிரத்து ஐநூறும் வேணுமாம்."

"அவனுக்கு மாறுகண்ணாச்சே!"

"ஆம்பள எப்படி இருந்தா என்ன? எனக்குக் கூடத் தான் மாறுகண்ணு."

"அதனாலதான் சொல்றேன் , மாறுகண்ணுக்காரனுக்கு வாக்கப்பட்ட ஒரு பொண்ணுக்குத்தான், இன்னோட பொண்ணின் மனசு தெரியும், நம்ம தமயந்தி எவ்வளவு அழகா இருக்கா! ஆலம்பழத்த, அண்டங்காக்கா கொத்துறதுக்கு விடலாமா? மூளைய 'உருக்கு'ப் பண்ணிப் பாரும். உமக்கென்ன? எவன் கையிலாவது கொடுக்கத் துடிச்சிட்டு... ஏடாகோடமா போயிட்டா என்னாலதான் இப்படி ஆச்சின்னு ஊர்ல பேசுவாங்க! அதைவிட செத்தே போவலாம்! பாழாப்போற கடவுளு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/187&oldid=1376326" இலிருந்து மீள்விக்கப்பட்டது