பக்கம்:இன்னொரு உரிமை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செத்தாலாவது வாழலாம் 189

நானும் வேல செய்யறதுல மாடாய் இருக்கோம். காக்காயாய் மாற முடியல! இந்தக் காலத்துல உழைக்கிறவன் அதிகமாய் உழைக்கிறதா உபத்திரவமாய் நினைச்சுக்கிறாங்க. மிராசுதாரையும் கண்ட்ராக்டரையும் பகைச்சுக்கிட்டீங்க. அவங்க சங்கை ஊத வேண்டிய இடத்தில ஊதி உங்களெ.”

“ஸார்... நான் உங்களத்தான் நம்பியிருக்கேன்!”

“ஆல் ரைட். நீங்க ஒரு மாதம் லீவு போடுங்க. நான் சாங்ஷன் பண்ணிடுறேன். மனிதாபிமானத்தைக் கருதி, மாற்றல் உத்தரவை ரத்து செய்யும்படியாய் ஒரு மனுக் கொடுங்க. நான் ஸ்ட்ராங்கா எழுதறேன்... என்னத்த எழுதி என்ன பிரயோஜனம்? எங்க நியாயம் இருக்கு?”

ராமலிங்கம் தான் படும் கஷ்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்கிருந்து மாற்றப்பட்ட இடத்துக்குப் போனால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் கோடி காட்டி, அங்கேயே விடுமுறை விண்ணப்பத்தையும், கருணை மனுவையும் கொடுத்துவிட்டு, சலிப்போடு வெளியே வந்தார்.

ராமலிங்கம் எஸ். எஸ். எல்.சி. படித்ததற்கு இந்த ஆண்டு வெள்ளி விழா நடத்தலாம். அவர் கிராமத்தில் முதன் முதலாக எஸ். எஸ். எல் சி. படித்த ஐந்தாறு பேரில் அவரும் ஒருவர். அவரைத் தவிர இதர எஸ். எஸ். எல்.சி.க்காரர்கள் தாலுகா அலுவலகங்களில் கிளார்க்குகளாகச் சேர்ந்து இன்று பல கிளார்க்குகளை வைத்து வேலை வாங்கும் அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் இந்த மனிதர் கிராம முன்னேற்றம் சமூக சேவை என்று பத்திரிகைகளிலும், அப்போதைய அமைச்சர்களின் வாய்களிலும் அடிபட்ட வார்த்தைகளில் மயங்கி பஞ்சாயத்து யூனியன் ஆபீசில் கிராம சேவக்காகச் சேர்ந்தார். அவரது இயல்பான பற்றற்ற ஒரே நிலையான குணத்தைப்போல் அதிகாரிகளின் வயிற்று வேகத்துக்கும் ‘ஈகோ’வுக்கும் தீனி போடமுடியாத இவரது உத்தியோகமும் ஒரே நிலையில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/198&oldid=1369393" இலிருந்து மீள்விக்கப்பட்டது