பக்கம்:இன்னொரு உரிமை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை இல்லாத நாயகி 197


“இந்த பில்டப் பற்றி ஒனக்குத் தெரியாதும்மா. படம் வருவது வரைக்கும் நாம் யாருன்னு தெரியப்படாது... இப்போ எல்லாருக்கும் ஒட்டுமொத்தமாய் வணக்கம் போட்டால்‘ அம்மா பேட்டி கொடுக்க வாராங்களோ’ன்னு சிரிப்பாங்க! தனித்தனியாய் போட்டாலோ, ‘அவனுக்கு எவ்வளவு உயரமாய்க் கையைத் தூக்குனே! எனக்கு மட்டும் இவ்வளவு உயரமா’ன்னு கேள்வி வரும். அதோட ‘நான் கதாநாயகியாயிட்டேன்னு காட்டுறியாக்கும்! எக்ஸ்டிரா’ன்னு சொல்வானுக... அதனாலதான் இப்படி பேசா மடந்தை மாதிரி...”

பூஜை மணி நாதமாகி, ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்தவர்களின் வாய்களைக் கட்டி, அவர்களின் கண்களைப் பூஜைப் படங்கள் பக்கம் திருப்பிவிட்டது உடனே அத்தனை புள்ளிகளும், ஞானப்புள்ளிகளாயின. அர்ச்சகர் ஒரு தட்டில் காட்டிய கற்பூர ஒளியையும், மறு கை அடித்த மணியோசையையும் கண்டும் கேட்டும் முகங்களை உப்ப வைத்தார்கள். உடம்பைக் குலுக்கிக் கொண்டார்கள்.

டைரக்டர் சந்திரன் தயாரிப்பாளர் காலில் விழுந்தான். அவரோ டிஸ்ட்ரிபியூட்டர் காலில் கை போட்டார். டிஸ்ட்ரி பியூட்டர் ‘பைனான்சியர்’ காலில். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலில் கைபோட்டு நான்கு கால்கொண்ட கூனர்களாய் ஆகிக்கொண்டிருந்தபோது, கும்பிடத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டவர்களும் பையில் மட்டுமே கை போடுபவர்களும் போகப்போக, கூட்டம் கரைந்து நான்கைந்து ஆட்களாயிற்று.

தமிழ்ச்செல்வி நிமிர்ந்துதான் நடந்தாள். சந்திரனை நோக்கித்தான் சென்றாள். அவனை அடிக்கப்போகிறவள் போல்தான் போனாள். பிறகு அவன் கால்களை கைகளால் பற்றி கரங்களை எடுக்க மனமின்றி இயல்பாய் குனிந்த படியே நின்றபோது சந்திரன் அவளைத் தோளோடு சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/206&oldid=1369402" இலிருந்து மீள்விக்கப்பட்டது