பக்கம்:இன்னொரு உரிமை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை இல்லாத நாயகி 199

மேக்கப் அறைக்குள் நுழைந்ததும், “ஒங்களுக்கு மேக்கப்பே தேவையில்லம்மா” என்றார் மேக்கப்பர். ‘தேவையில்லப்பா’என்று செல்லமாகச் சொல்லப்போனவர், அவள் பார்த்த பார்வையில் கன்றுக்குட்டிமாதிரி “மா” போட்டார். பிறகு ஒரு அறைக்குள் அவளைப் போகச் சொல்லி வாயில் புடவையைக் கட்டச்சொன்னார். உள்ளே வந்தவளை சுழல் நாற்காலியில் உட்கார வைத்தார். நிலைக்கண்ணாடி முன்னால் இருந்த விதவிதமான கண்ணாடி டப்பாக்களை உருட்டி, திரட்டி அவள் முகமெங்கும் தேய்த்தார். பிறகு ரோஸ் பவுடரைப் போட்டார். ஒரு பட்டுத்துணியால் தேய்த்துவிட்டார். கண்ணுக்கு மை போட்டு ஒற்றைவால் ஜடையை குதிரைக் கொண்டையாக்கினார். உதவிப்பேராசிரியை ஆயிற்றே... சும்மாவா.

மேக்கப்மேனின் பார்வைக் கோளாறு பதிப்பித்த ஆசிரியையாக தமிழ்ச்செல்வி வெளிப்பட்டாள். உருவமும், உடையும், செயற்கையானது போன்ற எண்ணம். ஆனாலும் அது தொலைவில் தெரிந்த காட்சியைக் கண்டதும் இயற்கைக் கூத்தாகியது. தமிழ்ச்செல்வி வெட்டுக்கிளிபோல் துள்ளி நடந்தாள். சிட்டுக்குருவியாய் தாவித்தாவி நடந்தாள். நிஜத்தை நிழலால் சரிப்படுத்தியபடியே முயல் பாய்ச்சலாய் போனபோது—

காமிராக்காரர், ஷோல்டர் ஷாட்டுக்காக உதவியாளர் தோளில் காமிராவைச் சுமத்தி கண் குவித்துப் பார்க்கிறார். லைட்டிங் பையன் சாம்பல் நிறத்தகடு மாதிரியான ஒருச் சாண் நீள வஸ்துவை தூக்கிப் பிடிக்கிறான். இன்னொருத் தன் கரும்பலகை மாதிரியான ஒன்றில் வெள்ளை எழுத்துக்களோடு நிற்கிறான். இவர்களுக்கு முன்னால் கதாநாயக நடிகர் புல்வெளியில் உலாத்துகிறார். தமிழ்ச்செல்விக்கு நிஜமாகவே காத்திருப்பதுபோல் அவளையே பார்க்கிறார். இயக்குநர் சகல மரியாதைத்தனங்களோடு நீட்டும் காகிதத்தைப் பார்க்காமலே நடந்து வருபவளையே உறுத்தலாய்ப் பார்க்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/208&oldid=1369472" இலிருந்து மீள்விக்கப்பட்டது