பக்கம்:இன்னொரு உரிமை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 205

போட முடியாது. திடீரென்று உள்ளே சத்தம் கூச்சலானது போல் கேட்டது. சின்ன மகனும், பெரிய மகனும் தத்தம் மனைவியுடன் அணிவகுத்து எதையோ, கூக்குரலுடன் வாதிடுவதுபோல் கேட்டது. ‘அப்பா அம்மா... எனக்கு மட்டும் என்ன தலையெழுத்து’ என்பது போன்ற வார்த்தைகள் கிழவருக்குக் கேட்கவில்லை. கிழவிக்குக் கேட்டது. அவரது காலில் பதிந்த தன் முகத்தை லேசாக நிமிர்த்திக் கொண்டே கிழவி ஒரு சந்தேகத்தைக் கேட்டாள்;

“ஏங்க... கொஞ்சம் பசியை மறந்துட்டு நான் சொல்றதக் கேளுங்க... நாம செத்துட்டோமா?”

கிழவர் திடுக்கிட்டு பின்புறமாக மடித்து வைத்திருந்த கைப்பின்னலோடு தலையை நிமிர்த்தினார்.

“இல்ல உங்க செல்ல மகனுக, அப்பா அம்மான்னு கூப்பாடு போடுறது மாதிரி இரையுறாங்க. நாம செத்தால் தானே! இந்த மாதிரி வார்த்தைங்கல்லாம் அவங்க வாயில வரும்... அதனால கேட்டேன்!”

கிழவர் முணுமுணுத்தார்.

“ஒனக்கும் பசிக்க ஆரம்பிச்சுட்டா? ஆமாம் நீ மட்டும் மனுஷி இல்லையா?”

“ஏங்க... என்னைப் பார்த்துச் சொல்லுங்க. ஒருசமயம் ஒங்கம்மாவுக்கு சாப்பாடு போட செத்தே லேட்டா யிட்டுன்னு என்ன குதி குதிச்சிங்க? லேட்டுன்னா பத்து நிமிஷ லேட்டு. இப்போ நம்ம பிள்ளிங்க எப்படி உள்ளே குதிக்காங்கன்னு பாருங்க! குதிக்கிற குறிக்கோளே மாறுனப்போ... நீங்க காலம் மாறலன்னு சொல்றீங்க! ”

“கண்ணு கூசுது. விளக்கை அணைப்பா!”

“உங்க கண்ணு வெளிச்சத்தால கூசல... பசியால், சொருகுது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/214&oldid=1369405" இலிருந்து மீள்விக்கப்பட்டது