பக்கம்:இன்னொரு உரிமை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208  சு. சமுத்திரம்

 "வர வர இந்த பேமிலி அபர்ஸே டர்ட்டியாய் மாறிட்டு. நான் இதுல இண்டர்பியர் பண்ண விரும்பல! வேணுமின்னால்... உங்களோட 'விஷ்ஷை' கன்வேய் பண்றேன்"

பாமா ஐ. நா. காரியதரிசிமாதிரி பேசிவிட்டு நகரப் போனாள். திடீரென்று கிழவர் இறுகிய குரலில் ஆணையிடுவது போல் பேசினார்.

"நீ ஒண்ணும் கன்வே பண்ணாண்டாம்... எப்படி நடக்க நினைக்காங்களோ... அப்படி நடத்தட்டும் விளக்கை அணைச்சுட்டுப் போம்மா! இனிமேல் இந்த விளக்கும் எதுக்கு ?"

பாமா விளக்கை அணைத்தாள். 'கன்வே' பண்ணத் தான் ஓடினாள். கொல்லைப்புற பக்கம் மொட்டை மாடி ரவிக்கு.

மௌனம் உறைபனியாய் மூட்டங் கொடுத்தது. கிழவி, கணவருடன் ஒட்டி உட்கார்ந்துகொண்டாள். அவள் கண் முன்னால் தனக்கு நடந்த கல்யாணம், முற்றுப்பெறாத முதலிரவு, பிறந்தகம் போகும்போது கணவனுடன் ஜோடியாக ஊருக்குள் நடக்க வெட்கப்பட்டு சற்றுப் பின் தங்கி நடந்தது. பெரியவனைப் பெற்றுப் போட்டதும் எட்டிப் பார்த்த அவரிடம் வெட்கப்பட்டது. பிள்ளைகள் வயசாகி வருவதை கணவர் சவனிக்கவில்லை என்று அடிக்கடி வாதிட்டது. அத்தனையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் வந்து, அவளை வாதை செய்தன. கிழவர் பேசாது கன்னத்தில் கை வைத்தபடி, மோவாய்க் கூரையைப் பார்க்க, உடல் பனியால் உருகியது போல், உள்ளம் அக்கினியால் எரிவதுபோல் இருந்தார். அந்த மூதாட்டியால் தாள முடியவில்லை. நீண்ட நேர கோர மௌனத்தைக் கலைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/217&oldid=1369005" இலிருந்து மீள்விக்கப்பட்டது