பக்கம்:இன்னொரு உரிமை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210  சு. சமுத்திரம்


"பைத்தியக்காரி! கொத்தனாருக்கு வீடு சொந்த மில்லாதது மாதிரி நாம உருக்கொடுத்த பிள்ளிங்களும், நம்மை உறவுல கொத்தனாராக்கிட்டாங்க! பெத்த மகனே துரத்தும்போது, கட்டுன வீடாப்பா பெரிசு... பைத்தியக்காரி!"

"அய்யோ ! நீங்க சொல்றதைப் பார்த்தால்...முடியாது. நானே அந்தப் பயலுவகிட்ட பேசப்போறேன்! இந்த வயசில எங்களைப் பிரிக்காதிங்கடான்னு அதட்டப் போறேன்! மருமகள்காரிங்க காலைப் பிடிச்சு மடிப்பிச்சை கேக்கப்போறேன்! அதையும் பார்த்துடலாம்."

"யதார்த்தமாய் பேசுப்பா! நாம ரெண்டு பேரும் சேர்ந்து கூச்சல் போட்டால் ஒருவேளை அவங்க என்னை உன் கிட்ட இருந்து பிரிக்காமல் இருக்கலாம், அப்புறம் என்ன நடக்கும்? மருமகள் காரி நம்மை சுமையா நினைப்பாள். பேரப்பிள்ளைங்க முனங்கும். நம்ம ரெண்டுபேரோட நெஞ்சில எல்லாருமே மிதிப்பாங்க. நாம ரெண்டுபேருமே மானஸ்தங்க... தள்ளாத வயசுல நம்மை பிரிக்கப்படாதுன் அவங்களுக்கே உறைக்கலன்னா, நாம எதுக்கு வாழணும்? அப்படி வாழ்ற வாழ்க்கையை, எங்கே வேணுமுன்னாலும் வாழலாம்! நாம என்ன வாழவா செய்யுறோம், சாவுக்காக காத்திருக்கோம்! நாம பிரியுறதும் ஒருவேளை நன்மைக்குத் தான்னு வச்சுக்கோ? நீ சாகும்போது நானோ, நான் சாகும்போது நீயோ, எப்படியோ துடிக்க வேண்டியதிருக்கும். இனிமேல் அந்தச் சிரமமில்லை பாரு!"

"அய்யோ இனி மேல் பேசாதிங்க... பேசாதிங்க."

"நான் பேசுனேன்னால்... எல்லாம் நன்மைக்கேன்னு சொல்லத்தான். உதாரணத்திற்கு இன்னும் ஒண்ணு சொல் றேன் கேளு. இப்போ லைட்டை பாமா அணைச்சிட்டாள். இருட்டாய் இருக்கது நல்லதாய் போச்சு இப்போ விளக்கு எரிந்து அந்த வெளிச்சத்துல ஒன் முகத்தை பார்க்கேன்னு வச்சுக்கோ... என்னால தாங்க முடியுமாப்பா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/219&oldid=1368999" இலிருந்து மீள்விக்கப்பட்டது