பக்கம்:இன்னொரு உரிமை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 சு. சமுத்திரம்

வந்தனவே தவிர, வைரவனின் உருட்டல் மிரட்டல் மட்டும் தனித்து வரவில்லை. கிராமத்தில் நொடித்து, நகரத்திற்குக் கணவனோடு வந்தது, கட்டிலில் கிடக்கும் கணவன், அவன் மீள்வானா என்ற பயம். காலொடிந்த பையன், அவன் கால் தேறுமா என்ற சந்தேகம். இது போதாதென்று இந்த வைரவன்...

மோகனா என்ன செய்வது என்று புரியாமல், தரையில் படவேண்டிய துடைப்பத்தைத் தலையில் வைத்தபடியே குத்துக்காலிட்டு இருந்தபோது, வாட்ச்மேன் வைரவனும் எஸ்டாபிளிஷ்மெண்ட் கிளார்க் ரமணனும் உள்ளே வந்தார்கள். மோகனாவுக்குச் சம்பள பில் போடுபவன் இந்த ரமணன். கண்ணாடி அறைக்குள் போய் உட்கார்ந்த ரமணன் அவளைத் தன் பக்கம் வருமாறு சைகை செய்தான். அவளும் புடவையை இழுத்துவிட்டு, அந்த அறைக்குள் போனபோது, ரமணன் வாட்ச்மேனை நோட்டம் விட்டான். பின்னர் அதிகாரமும், அன்பும் கலந்த தோரணையில் பேசினான்.

“வைரம், பக்கத்து ஆபீசுல போய் டி.ஏ. பில் வாங்கிட்டு வர்யா... நீ மதுரைக்கு டூர் போனதுக்கு பில் போடணும் பாரு.”

“கழுத பணம் கிடக்கட்டும் சார்! அதோட அந்த ஆபீஸ்காரங்க இன்னும் வந்திருக்கமாட்டாங்க.”

“அதுவும் சரிதான்... எப்பா ஒரே தலைவலி. போய்க் காப்பி வாங்கிட்டு வா!”

“ஏய் மோகனா, சாருக்குக் காப்பி வாங்கிட்டு வா!”

“பெருக்கற வேலையை ஏன்யா கெடுக்கிறே? அவளைக் காப்பி வாங்க அனுப்பினா அப்புறம் டெப்டி டைரக்டர் வர்றபோது துடைப்பமும் கையுமா நிப்பா! நீயே போயிட்டு வா! ஒனக்கும் ஒரு காப்பி அங்கேயே குடிச்சுட்டு நிதானமா வா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/229&oldid=1369423" இலிருந்து மீள்விக்கப்பட்டது