பக்கம்:இன்னொரு உரிமை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14  சு. சமுத்திரம்


சர்விஸில் அவுட்டான பந்து, அந்தப் பக்கமாய் உருண் டோடி வந்தது. சம்பத் அதை எடுப்பதற்காக ஓடி வந்தான். நாய்கள் தங்களைத்தான் அந்த மானுடன் துரத்த வருவதாக நினைத்து, சற்றுப் பின்வாங்கின. அதேசமயம் பன்றிக்குட்டி தப்பிக்கமுடியாதபடி இடைவெளிவிட்டுச் சூழ்ந்து நின்றன. ஓடி வருகிறவன் என்ன செய்கிறான் என்பதையும் பன்றிக் குட்டியையும் மாறிமாறி நோட்டம் விட்டபடி காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி நின்றன. மாட்டிக்கொண்ட பன்றிக் குட்டியும் அவனை எதிர்பார்ப்போடு பார்த்தது.

சம்பத் கீழே குனிந்தபோது அவன் கல்லை எடுப்பதாக நினைத்து, நாய்கள் முதுகைக் குனிந்து, முன்கால்களைத் தூக்கி ஒட்டமெடுத்துப் போயின, ஆனால் சம்பத் பந்தை எடுத்துக்கொண்டு பன்றிக் குட்டியையும் நாய்களையும் லேசாய்ப் பார்த்தபடியே திரும்பி ஓடிய போது, நாய்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. குதிகால் பாய்ச்சலில் வியூகம் கலையாமலே பன்றிக்குட்டியை அகோரப் பசியோடு நெருங்கின. காலுக்கு ஒன்றும், தலைக்கு ஒன்றும், வயிற்றுக்கு ஒன்றும் குறிபார்த்தபடி, வாய் பிளந்து முண்டியடித்தன. இத்தருணம் எப்படியோ கிடைத்த இடைவெளிக்குள் பன்றிக்குட்டி பாய்ந்து ஓடியது. நாய் வியூகத்தில் இருந்து விடுபட்டு அது குதிக்கப் போனபோது-

ஒரு நாய், அதன் வாலைக் கல்விப் பிடித்து இழுத்தது. இன்னொரு நாய் காலைக் கவ்வியது. குட்டியோ குய்யோ முறையோவாய்க் கூப்பாடு போட்டது. பூப்பெண்கள் பார்த்துக்கொண்டு நின்றதுபோல்தான் தெரிந்தது. வாலி பால்காரர்கள் காதுகளில், அதன் இறுதிக் குரல் விழுந்தது போல்தான் இருந்தது. என்றாலும் பன்றிக் குட்டியின் வாலைக் கவ்விய நாய், அதைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டிருந்தது. காலைக் கவ்விய நாய் இன்னொரு பக்கம் இழுத்தது. பன்றிக்குட்டி கோரமாய்க் கத்தியது. மானுட ஜீவிகளை விழி பிதுங்கப் பார்த்தபடியே ஓலமிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/23&oldid=1369518" இலிருந்து மீள்விக்கப்பட்டது