பக்கம்:இன்னொரு உரிமை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226  சு. சமுத்திரம்


மீனாட்சி புறப்படுவதற்காக எழுந்திருக்கப் போனாள். அப்படி எழுந்திருப்பதற்காக வலது கையைத் தரையில் ஊன்றிக்கொண்டே, "சதாசிவம்... என்னை வீட்ல டிராப் பண்ணிடு" என்றாள்.

"உன் மகன் ரவி வந்து பிக்கப் பண்ணுவான்னு சொன்னியே?" என்றார் சதாசிவம்.

"கம்பேனி கார்லே வந்துடுறேன்னான். அவன் சமாசாரந்தான் ஒனக்குத் தெரியுமே? சினிமாவுக்குப் போனாலும் போயிருப்பான்!"

மீனாட்சி எழுந்தாள். அண்ணனின் படத்துக்கு அருகே சென்று லேசாகக் குனிந்து கொண்டே, "தலைக்கு மேல ஒன் பொண்ண வச்சிக்கிட்டு தவிக்கிறாமே அண்ணா... நாங்க எவ்வளவு முயற்சி பண்ணினாலும், வித்யாவுக்கு நல்ல இடம் அமையமாட்டேங்குதே! கொஞ்சம் கருணை காட்டு அண்ணா" என்று கண்ணீர் மல்க மன்றாடினாள்தியாகராஜன் கருணை காட்டாததால் தான் கல்யாணமே நடக்காமல் இருப்பது மாதிரி.

சதாசிவம் அவசரப்படுத்தினார். அவர் அவசரத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. "எனக்கும் பொண்ணுங்க இருக்கு... என்னால மாப்பிள்ளை பார்க்க இயலாது. லாபத்தைப்போல நஷ்டம் வந்துட்டா அப்புறம் என் தல தான் உருளும்" என்று போன வருடம், தலையை உருட்டிக் கொண்டே சொல்லிவிட்டவர் அவர். ஒரு காலத்தில் 'வித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியது என் பொறுப்பு. ரவி பயலுக்கெல்லாம் கொடுக்கப்படாது' என்று டில்லியில் காமாட்சி செய்து போட்ட பக்கடாவைத் தின்று கொண்டே சொன்னவரும் இவர் தான், இப்போது, தன் சொந்த மகளுக்கு சின்ன வயதிலேயே வித்யாவுடன் இணைத்துப் பேசப்பட்ட ரவியை முடக்கத் திட்டமிட்டு இருப்பவரும் இவர்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/235&oldid=1368916" இலிருந்து மீள்விக்கப்பட்டது