பக்கம்:இன்னொரு உரிமை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அப்பால் 227

இருவரும் காரைவிட வேகமாகப் புறப்பட்டு, காருக்குள் நுழைந்து கதவைச் சாத்தினார்கள்.

காமாட்சி கணவன் படத்திற்கு அருகே போய் நின்றாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி... ‘அண்ணா! உங்க வித்யாவை எங்க ரவிக்குத்தான் கொடுக்கணும். மாட்டேன்னு சொன்னால் என் மகன் அவளுக்குக் கள்ளத்தாலி கட்டுவான்’னு சொன்ன உங்க தங்கை இப்போ எப்படிப் பசப்புறாள் பாத்திங்களா?” என்று பொருமினாள்.

வேலூரிலிருந்து வித்யாவின் பெரிய அத்தையும், அவள் புருஷனும் ஒரு கூடை ஆப்பிள் பழத்துடன் வந்தார்கள். மாமா எஞ்ஜினியர். அத்தை ஆசிரியை.

அத்தைக்காரி முறைப்படி அழுது முடித்துவிட்டு, வித்யாவின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே, “நம்ம வித்யாவுக்கும் நல்ல காலம் பிறந்துட்டுது. தம்பிங்களோ தங்கச்சியோ அவளுக்கு ஏதாவது வழி பண்ணுவாங்கன்னு நினைத்து இதுவரை சும்மா இருந்திட்டேன். தியாகுவோட நீங்க எல்லாருமே இறந்திட்டதாய் நினைச்சிட்டாங்க... கவலப்படாதீங்க, நானிருக்கேன்” என்றாள்.

காமாட்சியம்மாளுக்குப் புத்துயிர் ஏற்பட்டது. மகளுக்கு விடிவுகாலம் ஏற்படப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் நாத்தனாரைப் பார்த்து, “ஏதாவது சாப்புடுறீங்களா...” என்றாள். நாத்தனார்காரி தத்துவரீதியாகப் பேசினாள். அவள் புருஷன் ஒரு தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைக்கருகே நின்றுகொண்டார்.

“சாப்புட்டு சாப்புட்டுத்தான் என்ன்த்தைக் கண்டோம்? இப்போ அதுவா முக்கியம். நம்ம வித்யாவுக்கு ஒரு பையனைப் பார்த்திருக்கேன். ஒன்னுக்குள்ள ஒன்னு. இவருக்குத் தூரத்துச் சொந்தம்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/236&oldid=1369434" இலிருந்து மீள்விக்கப்பட்டது