பக்கம்:இன்னொரு உரிமை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை

19


அம்மாவையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போகிறவள் போலவும் இறுகப் பிடித்தவள். அப்புறம் இங்கே வந்து, கணவனிடம் தனித்துப் பேசும்போதுகூட, சொல்லுக்குச் சொல். வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா-அம்மா’ என்று மட்டுமே சொன்னவள். கட்டிய கணவன் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லையானாலும், மாமியார் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. 'நானும் உனக்கு அம்மாமாதிரி தானம்மா...' என்று சொல்லவேண்டியவர், 'எப்பப் பார்த்தாலும் அம்மா தானா! இங்க பிடிக்கலன்னா, வெளிப்படையாச் சொல்லிடேன்," என்று சொன்னதில் கோமதி அரண்டு போனாள். தன் மனத்துக்குள்ளேயே 'அம்மா’ என்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அந்த மனத்தைப் படலாக்கப் பார்த்தாள். முடியவில்லை.

கோமதி கருத்தரித்ததும் மாமியார் மகிழ்ந்து போனாள். கோமதியும் மகிழ்ந்துபோனாள். அம்மாவுடன் மூன்று மாதம் இருக்கலாம். ஏழாவது மாதத்திலே போய்விடலாம். மூன்று மாதமா... இல்லை, நாலுமாதம்... ஐந்து மாதம் முடியுமானால் ஆறுமாதம்.

குழந்தையின் பிறப்பில், தாயின் தரிசனம் கிடைக்கப் போவதில்லாமல் போன விரக்தியில் நிலைப்படியில் உட்கார்ந்தாள் அவள். இரவு முழுவதும் மாமியாரிடம் எப்படி நின்று எப்படிப் பேசவேண்டும் என்று மனக்கண்ணில் நிறுத்தி, தனக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொண்டது மாமியாரின் ஒரு நிமிடப் பார்வையில் பஸ்பமாகிவிட்டது. ஆனால் தன் தாயை அன்றைக்குப் பார்க்கமுடியாது என்ற எண்ணம், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆறுதலைத் தருவதற்குப் பதிலாக அன்றைக்கே பார்த்தாக வேண்டும் என்ற அசுர வேகத்தைக் கொடுத்தது.

அந்த வேகம் அவளை முன்னும் பின்னும் நகர்த்தியது. கண்ணில் நீராகவும் காதில் இரைச்சலாகவும் தலையில் பாரமாகவும் நெஞ்சில் நெருப்பாகவும் அந்த வேகம் அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/28&oldid=1369544" இலிருந்து மீள்விக்கப்பட்டது