பக்கம்:இன்னொரு உரிமை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20  சு. சமுத்திரம்


அலைக்கழித்தது. அம்மாவை, இன்னைக்குப் பார்த்தாணும். எப்படிப் பார்க்க முடியும்? இப்போ போற மாமியார் எப்போ வருவாளோ சொல்ல முடியாது. நாளைக்குப் பொங்கல். மறுநாளைக்கு மாட்டுப் பொங்கல். அம்மாவைப் பார்க்க முடியாது... அப்புறம் ரெண்டுநாள் வீட்டுக்குள்ள அடைபட்டுக் கிடக்கும் மாமியார் அதுக்குப் பிரதியா நாலு நாளைக்கு வெளிய போவாள். அப்புறம் கோவில் விசேஷம். ஒரு வாரம் அம்மா என்கிற பேச்சைக்கூட எடுக்க முடியாது. அப்படின்னா அம்மாவை எப்போ பார்க்கறது... எப்போ பார்க்கறது...'

திருவனந்தபுர நகரத்தில், ஆறு அண்ணன் தம்பிகளோடு ஒரே பெண்ணாக, செல்லமாக வளர்ந்தவள் கோமதி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே ஆனந்தப்பட்டவள், பிரசவத்திற்காகத் தாய் வீடு போனாள். குழந்தை, பத்தாவது மாதத்தில் பிறக்காமல் பதினோராவது மாதத்தில் பிறக்க வேண்டும் என்றுகூட நினைத்துக் கொண்டாள்.

குழந்தை பிறந்த நாற்பத்தோராவது நாள், இந்த ஊருக்குப் புறப்பட்டபோது, அவள் அம்மா, "இனிமேல் தாம்மா ஒரு தாயோட தவிப்பு உனக்கு அதிகமாகப் புரியும். எனக்கு ஆஸ்த்மா அதிகமாகிக்கிட்டு வருது. எப்போ போகப் போறேனோ தெரியல. ஒரு தடவையாவது என்னை வந்து பாப்பியம்மா? பேத்திய எனக்குக் காட்டுவுயாம்மா?" என்று ஒரு நாளும் அழாத அம்மா அன்று ஆசை தீர அழுதாள்.

கல்யாணமாகி ஒரு வாரத்திற்குள் பிறந்த வீட்டுக்கு வந்தபோது அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, 'அம்மா அந்த ஊரு எனக்குப் பிடிக்கலம்மா. லைட்டு இல்ல. பஸ் இல்ல... செருப்பு போட்டு நடந்தாக் கூட சிரிக்கிறாங்க." திருவனந்தபுரத்துல இருந்துட்டு, அங்க இருக்கக் கஷ்டமாயிருக்கும்மா' என்று சொன்னபோது அவள் அம்மா 'நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/29&oldid=1369552" இலிருந்து மீள்விக்கப்பட்டது