பக்கம்:இன்னொரு உரிமை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 21

பிறந்ததும் உன் புருஷன் ஊருக்குப் பக்கத்து ஊர்தாம்மா... இந்த டவுனுக்கு வரும்போது இது பிடிக்கல்ல... விஷயம் என்ன தெரியுமா? அப்போ, எனக்கு என் அம்மாகிட்ட இருக்க ஆசை. இப்போ உனக்கும் என்கிட்ட இருக்க ஆசை. சும்மா ஒப்புக்கு ஊர்மேல பழி போடுறே? என்று சொல்லிக் கொண்டு மகளுக்கு முத்தங் கொடுத்தபோது கூட அழாத அம்மா, குழந்தையும் கையுமாகப் புறப்பட்டபோது அழுதாள்.

“கவலைப்படாதிங்க... இன்னும் ஒரு மாதத்துள்ள கோமதியைக் கூட்டி வரேன்” என்று அருகே நின்ற கணவர் சொன்னார்.

ஆனால் இங்கே வந்து இரண்டு மாதமாகிவிட்டது. அம்மா வருவோர் போவோரிடம் சொல்லியனுப்புகிறார். ஆஸ்த்மாவின் கொடுமை தாங்கமுடியவில்லையாம். கடைசித் தடவையாய்ப் போய்ப் பார்க்கணுமாம். கோமதி கணவனிடம் சொல்லிப் பார்த்தாள். அவர், ‘அம்மாகிட்டே கேக்குறேன்’ என்றார். அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்ட அவர் தாயைப் பார்த்ததுமே ஆறு வயதுக்கு வந்துவிடுகிறார். ஒரு தடவை அம்மாவிடம் கேட்டுவிட்டு, ஒன்பதை வாங்கிக்கொண்டார். இறுதியில் தானே மாமியாரிடம் கேட்பது என்று தீர்மானித்துத்தான் கேட்கப் போனாள்.

கோமதி அரைமணி நேரமாக அப்படியே விக்கித்து இருந்தாள். பின்னர் அம்மா இருக்கும் திசையைக் கண்களால் கட்டிக்கொண்டு வருகிறவள்போல் வெறித்துப் பார்த்தாள். அடுத்த வாரம் பார்க்கலாம், அல்லது அடுத்த மாதம் பார்க்கலாம் என்று ஒரு நிச்சய நிலைமை இருந்தால் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கலாம். எப்போது பார்ப்போம் என்பதே தெரியாமல் இருந்தால் அது நரக வேதனைப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/30&oldid=1369559" இலிருந்து மீள்விக்கப்பட்டது