பக்கம்:இன்னொரு உரிமை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 23

கொல்லைப்புறத்தில் கன்றுக்குட்டி, ம்மா... ம்மா... என்று கூக்குரலிட்டது. அருகே இருந்தாலும் அரவணைக்க முடியாத அந்தக் குட்டியைப் பார்த்து, அந்தத் தாய்ப் பசுவும் ம்மா... ம்மா...' என்று திருப்பிக் கத்தியது.

கோமதி கனவிலிருந்து நனவுக்கு வந்தாள். வயிறு முட்டப் பால் குடித்த குழந்தை அதன் வாய்முட்ட, பால் துளிகள் பற்கள்போல் மின்ன அம்மாவின் தோளில் பற்றிய கையை எடுத்து அவள் கண்ணில் வைத்தது. இதற்குள் மாறிமாறி . ம்மா... ம்மா..." என்று பசுவும் கன்றும் ஒரே சமயத்தில் கத்தின.

கோமதி குழந்தையை எடுத்து அவசர அவசரமாகத் தொட்டிலில் போட்டுவிட்டுக் கொல்லைப் பக்கம் போய், “கொஞ்சம் பொறு... ஒன்னையாவது ஒன் அம்மாகிட்ட சேர்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே கன்றின் கயிற்று முடிச்சை அவிழ்க்கப் போனாள்.

அதற்குள் வாசல் பக்கம், “கோமதி... கோமதி...” என்ற குரல் கேட்டது. பெரியண்ணன் குரல் மாதிரி...

கன்றுக்குட்டியின் கட்டை அவிழ்க்காமலே வாசலுக்கு ஓடினாள். வாசல் வழியை மறிப்பதுபோல் ஒரு டாக்ஸி நின்றது. அதிலிருந்து பெரிய அண்ணன் மெளனமாக இறங்கி வாசலுக்கு வந்து கோமதியைப் பாதத்திலிருந்து கேசம் வரை உற்றுப் பார்த்தார். வாயடைத்தவளாய் அண்ணனையே பார்த்தாள் அவள். ஆனந்தமாகப் பார்த்தாள். பிறகு “அம்மாவையும் கூட்டிக்கொண்டு வரப்படாதா?” என்றாள்.

அண்ணன்காரர் எப்படிச் சொல்வது என்று புரியாமல் தங்கையைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டே, “சீக்கிரமாய்ப் புறப்படும்மா...” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/32&oldid=1369573" இலிருந்து மீள்விக்கப்பட்டது