பக்கம்:இன்னொரு உரிமை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 25

அவள... நான் உயிரோட பார்ப்பேனா? செத்துப்போனவள உயிரோட இருக்கிறதா பொய் சொல்றியோ? உள்ளத்த சொல்லிடு... உள்ளத்தச் சொல்லிடு” என்று கத்தினாள்.

இரு கரங்களையும் கூர்வாள்போல் ஆக்கிக்கொண்டு. தலையில் அடித்துக்கொண்டாள். தடுக்க வந்த அண்ணனை மூர்க்கத்தனமாகத் தள்ளினாள்.

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் கள் வெளியே வந்தார்கள். நிலைமையை யூகித்துக் கொண்டு “பாவம்... எப்பப் பார்த்தாலும் அம்மா என்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லமாட்டாள். ஒரு மாசமா அம்மாவைப் பார்க்கணும் பார்க்கணுமுன்னு துடியாய்த் துடிச்சாள். துடிச்சு என்ன பிரயோஜனம்? ஜெயிலுல இருக்கிறவள் மாதிரி இருக்கிறவள்...” என்று ஒரு பெண் கோமதியின் அண்ணனிடம் சொன்னாள்.

இன்னொருத்தி “சரி, வீட்டைப் பூட்டிட்டுப் புறப்படு, உன் மாமியார் வந்தா நாங்க சொல்லிக்கிறோம்” என்றாள்

கோமதி கண்ணிர் வெள்ளத்திற்கிடையில் பொய்யுருவங்களாய்த் தெரிந்த கூட்டத்தைப் பார்த்து, “அவரு ஆபீஸ் போயிட்டார். மாமியார் திறவுகோலை எடுத்துட்டுப் போயிருக்கார். அம்மா... ஒன்னை உயிரோட பார்ப்பேனா? இந்தப் பாவி பார்ப்பேனா? என்னைப் பார்க்க முடியாத ஏக்கத்துலேயே நீ இளைச்சிருப்பே... ஒன்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது நான்தான்... நான்தான்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

அவள் அண்ணன் கூட்டத்தைப் பொதுப்படையாகப் பார்த்துக் கேட்டார்.

“யாராவது ஒருத்தர் இந்த வீட்டைப் பார்த்துக்கணும்: நான் கோமதியைக் கூட்டிக்கிட்டு போறேன். மாப்பிள்ளையையும் அவரு அம்மாவையும் உடனே வரச்சொல்லுங்க! சரி கோமதி. இனிமே அழப்படாது வண்டில ஏறு:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/34&oldid=1369587" இலிருந்து மீள்விக்கப்பட்டது