பக்கம்:இன்னொரு உரிமை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 27

டாக்ஸி டிரைவர் “ஒருத்தரைக் குறை சொல்றோம்னா அவங்களால் ஏற்பட்ட வில்லங்கத்தைப் போக்குறத்துக்கு நாம தயாராய் இருக்கணும். சும்மா ஒண்னுக்கும் உதவாமல் திட்டுறதுல அர்த்தமில்லை. ஏழு மணிக்குப் புறப்பட்டோம், இப்போ மணி பத்து. அந்த அம்மா பாவம்! இந்நேரம்...”

டிரைவர் சொன்னதை முடிக்க முடியாமல் திணறிய போது கோமதி ஓலமிட்டாள். பிரசவத்தின்போது கத்தியதைவிடப் பேரிரைச்சலான ஓலம் எலும்புகளை நெகிழ வைக்கும் அவல ஒலி.

அண்ணன்காரர், தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டார். “சரிம்மா... நாகர்கோவில்ல போய் என் மதனியைக் கூட்டிட்டு வரேன். டிரைவர் அண்ணே!”

டாக்ஸி மின்னல் வேகத்தில் பறந்தது. கோமதி வண்டிக்குப் பின்னால் ஓடினாள். இரண்டு மூன்று பெண்கள் அவளைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டுவந்து உட்கார வைத்தார்கள்.

கலைந்த கொண்டை காற்றிலாட விழிநீர் கழுத்தில் தோரணமாக, கோமதி வீட்டுக்கும் தெருக்கோடிக்குமாக நடந்துகொண்டிருந்தாள். மாமியார் வருகிறாளா என்று பார்த்தாள். டாக்ஸி திரும்புகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்தாள். அவள் நடந்த நடையின் துரத்தைக் கணக்கிட்டால் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்திற்கே போயிருக்கலாம்.

டாக்ஸி திரும்பி வந்தது. அண்ணன் மட்டும் வெறுமையோடு வெளிப்பட்டார். “என் மதனியைக் கூப்பிட்டேன். அவங்களால வரமுடியாதாம். கையெடுத்துக்கூடக் கும்பிட்டுப் பார்த்தேன். முடியாதுன்னா முடியாதாம். அவருக்கு, மாறி மாறிப் பேசிப் பழக்கமில்லையாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/36&oldid=1369598" இலிருந்து மீள்விக்கப்பட்டது