பக்கம்:இன்னொரு உரிமை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமனுக்கு ஆகாது 35

“ஏம்மா அழுவுற... நீ என்னம்மா பண்ணுவே, கவலைப் படாதம்மா. இந்த பிள்ள போனா, இன்னும் எத்தனையோ பிள்ளை பெத்துக்கிடலாம்மா... ஆனால் உன் அண்ணாச்சி போயிட்டா...”

“நீ என்ன சொல்ற?”

“இதவிட எப்படிம்மா சொல்லுவேன்! செவத்தியா புரத்துல ராமசாமி பேத்தியாளுக்கும் இப்படித்தான் மால சுத்தி பிறந்தது. கழுத்த நெறிச்சு...”

“அம்மா!” என்று கத்தினாள் பாக்கியம். பிள்ளையை மார்போடு அணைத்துக்கொண்டாள். ஆழமான கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது போன்ற பிரமை. வாய்வழியாகக் கிணற்று நீர் உடல் முழுதும் வியாபிப்பது போன்ற கனம்.

“இதைச் சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வந்தது?”

“பெத்த வயிறு கேக்கலம்மா!”

“என் பெத்த வயிறு மட்டும் எப்படிம்மா கேக்கும்?”

கிழவி குற்ற உணர்வில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பிறகு தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். மகள் அருகே சென்று அவளை அணைத்துக்கொண்டாள். பிறகு மெள்ள பேச்சைத் துவக்கினாள்.

“இந்தா பாரும்மா... எனக்கு அவன் பிள்ள இல்லியா! பேரு சொல்றவன் பேரன்பாங்க... ஆனால் உன் அண்ணாச்சி இந்த நாப்பது வயசுல... எங்களால தாங்கமுடியுமாம்மா?”

“நான் மட்டும் அண்ணாச்சிய விட்டுட்டுத் தாங்கிக்கிடுவேனா? நான் தங்கார புள்ளியா? (சுயநலவாதியா)”

“அதனாலதான் சொல்லுதேன். ஒன் பிள்ளக்கி பிறந்தவுடனே, கனச்சூடு வந்திட்டு, நாலு நாளையிலே போயிடு முன்னு குடிமவா சொன்னா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/44&oldid=1388337" இலிருந்து மீள்விக்கப்பட்டது