பக்கம்:இன்னொரு உரிமை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 சு. சமுத்திரம்

தலையில் ஒரு கோலியை வைத்து, அதில் ஒரு நூலைக்கட்டி முகம் வழியாகக் கீழே தொங்கப்போட்டால், அந்த நூல் இரு சாண் இறக்கத்தில் மட்டும், லேசாய் மேடுபட்டு பிறகு நெளியாமலே பாதங்களுக்கு இடையே விழும். அப்படிப்பட்ட நேர்கோடு உருவக்காரியின் பாதங்களுக்கு மத்தியில் இப்போது நிசமாகவே ஒரு கல் விழுந்தது. உடனே அவள் எட்டுக்கால் பூச்சிபோல் உடம்பை வளைத்து ‘எம்மா டாடி’ என்று இருமொழியில் கூக்குரலிட்டு எழுந்தபோது—

அவளுக்கு இருபக்கமும் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள் அவளோடு அவளாய் எழுந்தார்கள். அவளை ‘அச்சச்சோ’ போட்டு பார்த்தபடியே “நாங்க இருக்கோம். கவலைப்படாதே பாப்பா” என்று சொன்னபடியே ஒருத்தி அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். வேதா மாதிரியான ‘பாப்பா வயதுக்காரி’ “நான் அழுகிறேனா... அழாதீங்க” என்று தன்னையே முன்னுதாரணமாக்கி அவள் கண்ணிரைத் துடைத்துவிட்டாள். அந்த அன்பு வெள்ளத்தில் வேதா மெய்மறந்தபோது, அந்த இரண்டு பெண்களும் அவளை அவள் தோளில் தொங்கிய ஜோல்னா பையுடன் சேர்த்து அனைத்தபடியே பஸ்ஸின் பின்வாசல் வழியாக படிப்படியாய் இறங்கி தரையில் விட்டார்கள்.

வேதாவுக்கு உடலெல்லாம் புல்லரித்தது. இப்படிப்பட்ட அன்பை தாயிடம்கூட கண்டதில்லை. தந்தையிடம் பார்த்ததில்லை. அந்தப் பெண்களுக்கு நன்றி சொல்வதற்காக ஏறிட்டுப் பார்த்தாள். நான்குபுறமும் திரும்பிப் பார்த்தாள். அவர்களை எங்கேயும் காணோம். ஒருவேளை கூட்டத்திற்குள் சிக்கியிருப்பார்களோ என்று பயப்படாமல் அந்த வன்முறைக் கும்பலுக்குள் எட்டிப் பார்த்தாள். காணவில்லை. வேதா யோசித்தாள். புறநானூறில் “உண்டால் அம்ம” என்று வருமே அதுமாதிரி, கைமாறு கருதாமல் உதவக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/49&oldid=1388371" இலிருந்து மீள்விக்கப்பட்டது