பக்கம்:இன்னொரு உரிமை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகலில் சென்னை 45

போட்டான். அப்படியும் திருப்தியடையாமல் ஒவ்வொரு துணியையும் உதறினான். அந்தப் பையைத் தலைகீழாகத் தூக்கினான். அவள் எதையும் ஒளித்து வைத்திருப்பாளோ என்று அவள் மார்பகத்தைக் கூட உன்னிப்பாய் பார்க்கப் போனான். வேதா கூனிக் குறுகினாள். பிறகு கோபத்தோடு திட்டப்போனாள். ஆனால் வாய்த்திட்டுக்களுக்குப் பதிலாக, கண்களில்தான் திட்டுத் திட்டாக கண்ணீர் வந்தது. அவன் நீட்டிய ஜோல்னா பையை வேண்டா வெறுப்பாய் வாங்கியபடியே வெளியேறினாள்.

வேதா அங்குமிங்குமாய் நடந்து அலைமோதினாள். “வீட்டுக்கு எப்படிப் போவது?” ஏன் போகமுடியாது? அதோ “உங்கள் நண்பன்” போலீஸ் ஸ்டேஷன் இருக்குதே. அப்பா செக்கரட்டேரியட்டில் அண்டர் செக்கரட்டரி. அவர் பேரைச் சொன்னாலே போதும். போதுமோ போதாதோ, இந்தமாதிரிச் சமயத்தில் உதவுவது போலீஸ் கடமை. யாச்சே!”

வேதா, அந்தக் காவ்ல்நிலையத்திற்குள் வந்தபோது, லாக்கப்வாசிகள் சந்தோஷப்பட்டு எதையோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டரை “ஸார்... ஸார்” என்றார்கள். உடனே கோபத்தில் முகம் திரும்பிய ரைட்டர் மகிழ்ச்சியை முகமாக்கினார். பிறகு முகத்தை மீண்டும் கஷ்டப்படுத்திய படியே அவளை அதட்டலாகப் பார்த்தார். வேதா மன்றாடும் தொனியில் விளக்கப்போனாள்:

“ஸார் எங்கப்பா.”

“ஒங்கப்பா யாரா இருந்தா என்ன, விஷயத்துக்கு வா!”

“என் பணத்தை பிக்பாக்கெட் செய்துட்டாங்க, திருவான்மியூர்ல வீடு. வீட்ல...”

ரைட்டர் ‘ராங்கரானார்...’ மனதுக்குள்ளேயே எப்ஐஆர் எழுதினார். பெண்ணோ அழகு, ஊரோ ஏடாகோடம், கேஸோ பிக்பாக்கெட்! மாதமோ கடைசி. நல்ல கேஸாத்தான் வந்திருக்கு ஜாமின்லகூட விடப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/54&oldid=1388396" இலிருந்து மீள்விக்கப்பட்டது