பக்கம்:இன்னொரு உரிமை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 சு. சமுத்திரம்

இருக்கும் தெருவுக்கு வந்துவிட்டாள். அங்கே அப்பா, அம்மா தம்பி, தங்கைகள் வாசலுக்கு வெளியே நின்றார்கள். அம்மா அங்கிருந்தபடியே இரண்டு கைகளையும் நீட்டினாள். அவள் தம்பி அவளை நோக்கி ஓடி வந்து வேதாவின் கையைப் பிடித்துக்கொண்டே கதைபோல சொன்னான்:

“எக்கா, எக்கா! அம்மா அழுதுட்டாங்க. நானும் அழுதுட்டேன். இந்த பாருதான் அழலக்கா. திருட்டுப் பொண்ணு. அவளுக்கு டி.வி.யில் இந்தி டிராமாவுக்கு அர்த்தம் சொல்லாதே. டாடி இப்படி பயந்து நான் பார்த்ததே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகப் போனார். மம்மிதான் தடுத்துட்டாங்க, எங்கக்கா போனே, சித்தி... நீ காலையில ஒன்பது மணிக்கே பஸ் ஏறிட்டதாய் போன் போட்டாள். ஏன் லேட் எனக்கு என்ன வாங்கீட்டு வந்தே!”

“என்னையே வாங்கிட்டு வந்திருக்கேன் ராஜா!”

வேதா, ஒடினாள். பெற்றோர்கள் மார்பில் சாயவோ, மனம்விட்டுக் கதறவோ ஓடினாள். தனக்காக அவர்கள் பட்ட வேதனையில், பாசத்தின் சாதனையைக் கண்டவளாய். சிரிப்பும் அழுகையுமாக அவள் ஒடியோடி வீட்டு வாசலுக்குள் நுழைந்தபோது-

டாடி அவளருகே நெருங்கி வந்தார். வேதா, தந்தையின் தோளில் சாயப்போனாள். ஆனால் அவரோ அவள் தலைமுடியை வலது கையால் பற்றினார். பற்றிய கையைச் சுற்றினார். அவள் சுருண்டு விழுந்தாள். விழுந்தவள் விலாவைக் காலால் இடறியபடியே அப்பாக்காரர் கத்தினார்:

“எச்சிக்கலை நாயே! வீட்டுக்கு எப்போ வேணுமுன்னாலும் வரலாம் என்கிற அளவுக்கு திமிரு வந்துட்டா? நாலு மணி நேரமாய் எங்கே போனே? பொட்டைக் கழுதைக்கு இவ்வளவு தைரியமா... ஏய் விடுடி என்னை. எல்லாம் நீ கொடுத்த செல்லம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/57&oldid=1388399" இலிருந்து மீள்விக்கப்பட்டது