பக்கம்:இன்னொரு உரிமை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வெட்டி மனிதர்கள் 55


சிதம்பரத்திற்குக் கொஞ்சம் பயந்தான். காரைக்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டில் பத்து ஆண்டுகள் சமையல் செய்துவிட்டு, இந்த மலையடிவாரப் பகுதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் வந்தான் கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை, இந்தக் கடையில் போட்டான். மண்சுவர்தான். ஒலைக் கூரைதான். பட்டா இல்லாத இடம். இருந்தும் ஐநூறு ரூபாய் கொடுத்து இந்த இடத்தை வாங்கினான். விற்றவன், அந்த ஐநூரை பட்டச் சாராயத்தில் போட்டு ஆயிரம் ஆயிரமாகப் புரட்டுகிறான். சில சமயம் அவரைப்போல் 'அம்போவாக' அருகிலேயே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் சிலர் வருவார்கள். வந்தவர்கள் கலர் கிலர் குடிப்பார்கள் என்றாலும், அவனது நிரந்தர வாடிக்கையாளர்கள், மலைக்கு விறகுக்குப் போகிறவர்கள்தான். விறகுக் கட்டோடு கடனுக்குச் சாப்பிட்டு விட்டு, பிறகு விற்ற பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோகு முன்னாலயே இவன் கணக்கை முடிப்பார்கள். ஆனால் இந்தப் போலீஸ்காரர்... இவருக்குக் கணக்கு தேவையில்லை. இவர் சாப்பிடுவதைவிட இவரே விடை கண்டுபிடிக்க முடியாத கணக்காகிவிட்டார். சிதம்பரம் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 'ஸார்' என்றான்.

'என்னடா...

அய்யா தப்பா நினைக்கக்கூடாது. நான்... ஏழு...

"நீ சொல்லியாடா எனக்குத் தெரியணும்? தண்ணிக் குள்ளயும் தடம் கண்டுபிடிக்கிற ஆளு நான்! ஜாக்கிரதையா இருந்துக்க!"

"அய்யா என்ன சொல்றீக!

'வரவர ஒன் கடையிலேயே கள்ளச்சாராயம் கொண்டு வந்து சிலரு குடிக்கரதா கேள்விப்பட்டேன், ஜாக்கிரதையா இருந்துக்க. இல்லன்னா கடைய சீல் வச்சு ஒன்னையும் சீல் வச்சுடுவேன்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/64&oldid=1388603" இலிருந்து மீள்விக்கப்பட்டது