பக்கம்:இன்னொரு உரிமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

அழகி’' என்று ஒரு சரித்திரத் தொடர்கதையை எழுதினார். தீவிரமான ஏட்டிக்குப் போட்டி அரசியல் கட்டுரைகளுக்கிடையே, 'முட்கலூர் அழகி’க்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருந்தது.

அப்போதே நான் நினைத்தேன்; சிறந்த இந்த இளைஞனின் திறமைகளை காலம் ஒருநாள் தலை வணங்கி எற்றுக்கொள்ளத்தான் போகிறது என்று. அது எந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதற்கு அவர் படைப்புக்குக் கிடைத்த 'சாகித்திய’ அகாதமி விருதே சான்று ஆகும்.

தேசிய முழக்கம் என்ற எங்கள் பத்திரிகைக் ’குருகுலத்தில்’ தோன்றிய இந்த எழுத்துச் செடி, இன்று வளர்ந்து, மரமாகி, காய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, ஒரு தாயுள்ளத்தோடு ’இவன் தந்தை என் நோற்றான் கொல்’ என்னும் சொல்லுக்கிலக்காய் நாங்கள் பெருமையடைகிறோம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள எந்தக் கதை யைப் படித்தாலும், கதை படிக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு எழவில்லை. அவர் கதைகளின் பாத்திரங்களும் சம்பவங்களும், நம்மைச் சுற்றியோ, நாமாகவோ கூட இருக்கிறோமோ என்ற எண்ணமே நமக்கு ஏற்படுத்தும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களை இகழ்வதையும், இம்சிப்பதையும், வலியவர்கள் மெலியவர்களைச் சுரண்டுவதையும், பகிரங்கமான கிண்டலோடும், மறைமுகமான எதிர்ப்புக் குரலோடும் இவர் பாத்திரங்கள் உலா வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/7&oldid=982889" இலிருந்து மீள்விக்கப்பட்டது