பக்கம்:இன்னொரு உரிமை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களுர் தெரஸா 71


"என்னப்பா நீ! பெரிய பெரிய பங்களாக்காரங்களுக்கே இங்கே இடம் கிடைக்காது. அதோடு ஆக்ஸிடெண்ட் கேஸ். அதோடு நான் வெறும் வார்ட்பாய்!"

"ஆஸ்பத்திரிகளில் வார்ட்பாய் ஆதிக்கம்தானே தம்பி அதிகம். நீயும் ஏழை; நானும் ஏழை; இந்தம்மாவும் ஏழை. ஏழைக்கு ஏழை உதவப்படாதா? இவங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அரசாங்க டாக்டர்களால் இவங்க கால் போயிடும்! போலீஸ் கேளானால் என் வேலை போயிடும். எப்படியாவது உதவு தம்பி பணத்தைப்பற்றிக் கவலையில்லை. என் பெண்டாட்டிகிட்டே தங்க நகை பத்து பவுன் வரைக்கும் இருக்குது."

வார்ட்பாய், லிங்கையாவை உற்றுப்பார்த்தான். காக்கி யூனிபாரத்தில் கண்ணீர் வழியக் கசங்கிப்போயிருந்த அவனைப் பார்த்ததும் அவனுள் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது.

“ஒரு காரியம் பண்றேன்! ஆறாம் நம்பர் ரூமுக்கு ஒசைப்படாமல் கொண்டு வா! டெக்னிஷியன்கிட்டே எப்படியாவது சொல்லி எக்ஸ்ரே எடுக்க வச்சுடுறேன். டாக்டருங்க கருமிப் பசங்க எக்ஸ்ரேக்கு காசு வசூலிக்கதுக்காவது அம்மாவை அட்மிட் செய்துடுவாங்க!”

வார்ட் பாய் தன் பாட்டுக்கு நடந்தான்.

அரைமணி நேரத்திற்குள் தெரேஸவிற்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வலது காலில் முறிவு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு பாண்டேஜூம் போடப்பட்டது. "எப்படி இந்தம்மா இங்கே?" என்று கத்திய டாக்டரிடம் "என்னைக் கேட்டால்?" என்று வார்ட்பாய் அமர்த்தலாய்ப்பதிலளித்து விட்டு தெரேஸாவை ஒன்பதாம் நம்பர் அறைக்குக் கொண்டு வந்தான். மாத்திரைகளைச் சாப்பிட்டதால் வாதை குறைந்த தெரேஸா லிங்கையாவிடம் கேட்டாள்.

"என்னவாம்?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/80&oldid=1369029" இலிருந்து மீள்விக்கப்பட்டது