பக்கம்:இன்னொரு உரிமை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 77



கொண்டே "என் ராசா! ஒனக்கு என்னடா பண்ணிட்டு, பண்ணிட்டு" என்று கதறிக்கொண்டிருந்தாள். அவன் தம்பி இருபத்திரண்டு வயது கனகராஜ் அண்ணனின் கைகால்களைத் தடவி விட்டுக்கொண்டே விம்மிக்கொண்டிருந்தான்.

தோட்டத்தில் இருந்து அவன் தலையை ஒருவர் தோளிலும் கால்களை இன்னொருவர் தன் தோளிலும் வைத்திருக்க நடுவில் இரண்டுபேர் தத்தம் கைகளால் அவன் முதுகையும் வயிற்றையும் சுமந்துகொண்டு பிள்ளையார் கோவில் வழியாக வந்தபோது அவர்கள் பின்னால் ஊரே திரண்டு வந்தது.

சொல்லமுடியாத கூட்டம். "வழி விடுங்கல... காத்து போகட்டும்" என்று சொல்லிக்கொண்டே ஐயாசாமி தாத்தா முண்டியடித்துக்கொண்டு முன்னே போனார். அவன் கையைப் பிடித்து "நாடி" பார்த்தார். "நாடி விழுந்து கிட்டே இருக்கு சீக்கிரமா ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்க” என்றார்.

"அதுவரைக்கும் தாங்காதே மாமா!" என்றார் ஒருவர்.

"ஆமாம் இன்னும் பத்து நிமிஷத்துல என்ன பண்ணனுமோ! அதைப் பண்ணிடனும் இல்லன்னா..."

ஐயாசாமி சொல்லவந்ததை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, வைரமணியின் மனைவி லிங்கம்மா தோட்டத்தில் 'ஒடிச்ச' அவுத்திக்கீரைகளைத் தோளில் வைத்துக்கொண்டு பரக்கப்பரக்க விழித்தவாறு அங்கே மெதுவாக வந்துகொண்டிருந்தாள்.

"எதையும் தின்னுருப்பானா?"

"இருக்காது: விஷத்தைக் குடிக்சிருந்தா! இதுக்குள்ள உயிரு போயிருக்கும். ஏதாவது கடிச்சிருக்கும்... வாயிலே கூட நுரை வருது பாருங்க”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/86&oldid=1369098" இலிருந்து மீள்விக்கப்பட்டது