பக்கம்:இன்னொரு உரிமை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 சு. சமுத்திரம்



'பாம்பு’ என்ற வார்த்தையை 'ஏதாவது' என்ற புற்றுக்குள் ஒளித்து வைத்துப் பேசியவர் மீண்டும் "இன்னா அவன் வீட்டுக்காரியே வந்துட்டா! அவள் கிட்ட கேளுங்க", என்றார்.

இதற்குள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த அம்மாக்காரி "புருஷன் துள்ளத் துடிக்கக் கிடக்கான். நீ அவுத்திக் கீரையை வச்சிக்கிட்டு. ஆடி அசைஞ்சா வார... சண்டாளி. ஒன்ன என்னைக்குக் கைப்பிடிச்சானோ அன்னைக்கே என் பிள்ளை அர உயிரா ஆயிட்டான். காளியம்மா இந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளியத் தந்துட்டு நான் பெத்த மவன எடுத்துக்கிட்டுப் போகப் பாக்கியே... இது ஒனக்கே நல்லா இருக்கா? நல்லா இருக்கா?" என்று அழுகுரலை அதிகமாக்கினாள்.

"தோட்டத்தில் என்னம்மா நடந்தது?" என்றார் ஒருவர். லிங்கம்மா பேசாமல் இருந்தாள்.

"சொல்லித் தொலையேம்மா... ஒன்னையும் கூட்டிக் கிட்டு தோட்டத்துக்கு நல்லாத்தானே போனான். என்ன நடந்தது... மூதேவி... வாயில கொழுக்கட்டையா வச்சிருக்க . சொல்லித் தொல... இல்லன்னா... வெள்ளச் சேல கட்டணும். சொல்லேன். நாய்ப்பய மவள..." என்றார் அப்பாக்காரர். மகன் நிலைமை மேலும் மோசமானதால் அவளைத் திட்டுவதை விட்டுவிட்டு, பெற்ற பிள்ளையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஏங்கி ஏங்கி அழுதார்.

லிங்கம்மாவை இரண்டு பேர் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் பரக்கப் பரக்க விழித்தாளே தவிர, பதில் சொல்லவில்லை. புலன் விசாரணை செய்தவர்கள் கோபத்தை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த போது ஐயாசாமி தோன்றினார்.

"பேய்ப் பய மக்கா... அவள் 'கூறுதான்' ஒங்களுக்கே தெரியுமே... அவளப் போயி மிரட்டுனா எப்படி? போங்கல. போயி வைத்தியரக் கூட்டிக்கிட்டு வாங்க! லிங்கம்மா பயப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/87&oldid=1369111" இலிருந்து மீள்விக்கப்பட்டது