பக்கம்:இன்னொரு உரிமை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 81


"நீ எதுக்குடா சாவணும்? ஆம்பிள ஆயிரம் பொண்டாட்டி கட்டிக்கலாம்."

"பொண்டாட்டி பிடிக்கலன்னா இன்னொரு பொண்டாட்டி கட்டிக்கறது. இதுக்குப் போயி... பைத்தியக்காரன்... என்ன மாமா நான் சொல்றது?"

'என்ன மாமா'வான மாயாண்டி இரண்டு பெண்டாட்டிக்காரர் மட்டுமல்ல. இதனால், ஆப்பசைத்த குரங்கு மாதிரி ஆனவர், ஆகையால் தன்னை விழித்து, தன் அங்கீகாரத்திற்காகச் சொல்லப்பட்ட வார்த்தையால், சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்தவர்போல் பேசினார்.

"ஏண்டா உனக்கு இந்தப் புத்தி? பொண்டாட்டி என்கிறவளும் ஒரு மனுஷிதானே. கட்டினவளுக்குத் துரோகம் பண்ணப்படாது. ஒருத்தியைத் தாலி கட்டிட்டு இன்னொருத்தியை வச்சிக்கலாமே தவிர கட்டிக்கக்கூடாது."

"நீரு கிடயும், எல்லாம் எங்க பெரியப்பாவால வந்தது. சரியான லூஸைக் கட்டிவச்சிட்டாரு. இன்னும் இந்த வீட்ல என்னெல்லாம் நடக்கப்போவுதோ."

ஐயாசாமியால் பேசாமல் இருக்க முடியவில்லை. வைர மணியின் நாடியைப் பார்த்துக் கொண்டே "ஏய் லிங்கம்மா! இங்க வாம்மா, உன்னோட தாலி பாக்கியத்தால தான் இந்தப் பயல் பிழைச்சிக்கிட்டான். இல்லன்னா இவன் இவ்வளவு தின்னதுக்கு எப்பேர்ப்பட்ட டாக்டராலும் காப்பாத்த முடியாது. உன் தாலி கெட்டியான தாலி தான். அங்கே ஏம்மா நிக்கிற? அவுத்திக்கீரையைப் போட்டுட்டு வா. வாம்மா இவன் காலைப் பிடிச்சுவிடு."

லிங்கம்மா அவுத்திக்கீரையைப் பிரிய மனமில்லாதவள் போல் தயங்கி வைத்துவிட்டு, புருஷனின் கால்களைப் பிடித்து விட்டாள். கூட்டத்தினர் ஏதோ ஒருவித குற்ற உணர்வின் சுமை தாங்கமாட்டாதவர்கள் போல் நழுவிக் கொண்டிருந்தார்கள்.

சி.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/90&oldid=1369395" இலிருந்து மீள்விக்கப்பட்டது