பக்கம்:இன்னொரு உரிமை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 சு. சமுத்திரம்

துக்குள் வெந்துகொண்டிருப்பதை அறிந்த மாடசாமி நாடார், ‘வழக்கு’ பேசப் போவதையும் நிறுத்திவிட்டு, தனக்குள்ளேயே அடிக்கடி வழக்குப் பேசிக்கொண்டார்.

வைரமணி ஒரு முடிவுக்கு வந்தான். ‘இரண்டாவது கல்யாணம்.’ அம்மாவிடம் தனக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று அரைகுறை வார்த்தைகளால் அவன் சொன்னபோது, “அன்னைக்கு எழுதுனத அடிச்சி எழுத முடியுமா? உன் தலையெழுத்து அப்படி ஆயிட்டு... சட்டியா பானையா... மாத்தரதுக்கு” என்று சொல்லிவிட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் வைரமணி தோட்டத்துக்குப் போய், அங்கே தங்கரளி மரத்தில் இருந்த காய் ளைப் பறித்துத் தின்றுவிட்டான். தீராத பிரச்னைக்கு தற்கொலை முயற்சியை ஒரு தீர்வாக நினைத்தான்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒருவாறு தேறி, மீண்டும் தோட்டத் துறைகளுக்குப் போகத் துவங்கினான். அவனுடன் அவன் தம்பிக்காரனும் மெய்க்காவலாளன் போல் போய்க்கொண்டிருந்தான் அண்ணன் மொச்சைக் கொட்டையைத் தின்றால்கூட, “காட்டு பார்க்கலாம்” என்று கட்டாயப்படுத்துவான்.

இதற்கிடையே இன்னொரு நிகழ்ச்சி.

வைரமணியின் அம்மா இன்னொரு ஊரில் ‘துஷ்டி’ கேட்கப் போயிருந்தாள். அவன் அப்பா உடம்பெல்லாம் வீங்கி, படுத்த படுக்கையாகக் கிடந்தார். லிங்கம்மாவைக் ‘காவலுக்கு’ வைத்துவிட்டு அண்ணன், தம்பி இருவரும் வயலுக்குப் போயிருந்தார்கள். திரும்பி வந்து பார்த்தால் மாடசாமி நாடார் கால் கை விறைத்துப்போய், வாயில் ஈக்கள் மொய்க்கக் கிடந்தார். லிங்கம்மா, கட்டிலில் சாய்ந்து கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் இறந்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/93&oldid=1369381" இலிருந்து மீள்விக்கப்பட்டது