பக்கம்:இன்னொரு உரிமை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  சு. சமுத்திரம்

 வந்தார். இந்தத் திருமணம் தேவையா, தேவையில்லையா என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தார். 'முன்னால் போனால் கடித்து, பின்னால் போனால் உதைக்கும்' இந்தக் 'கழுதைப் பய விஷயத்துல' அவரால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கும் வர முடியவில்லை. எப்படியோ மாப்பிள்ளைகளை சுடலை மாடசாமி கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போகிறவர் அவர் தான். கைராசிக்காரர் என்பதோடு சுடலையாண்டி அவர் பிரார்த்தனையைத் தட்டமாட்டான் என்று ஊரார் மட்டுமல்லாமல் அவரும் நம்பினார். அந்த நம்பிக்கையில் மாப்பிள்ளையை அதட்டினார்.

"முட்டாப்பய மவன! துண்டை தோளுல போடா தடா! ஓடுப்பில எடுத்துக்கிட்டுக் கோவிலுக்குப் பணிவா போவணும்! இல்லன்னா மாடன் கோவிச்சுக்குவான். ஆமாம் மாலை எங்சேடா?"

"உள்ள இருக்கு."

"உள்ள என்னடா சத்தம்?"

"அவதான்!"

"அவன்னா யாரு?"

"என் சம்சாரம்-- வைரமணி தலையைக் குனிந்து கொண்டான்.

"லிங்கம்மாவா! அதுவும் நல்லத்துக்குத் தான். ஏய் லிங்கம்மா! அந்த மாலையை எடுத்துக்கிட்டு வாம்மா... வா நேரமாவுது."

லிங்கம்மா மல்லிகைச் சர மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு வந்து நின்றாள், முகத்தில் எந்தவித சலனமுமில்லை. ஐயாசாமி தாத்தா அழுகையை அடக்கிக் கொண்டார்.

"உன் புருஷன் கழுத்திலே நீயே மாலையைப் போடு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/97&oldid=1369121" இலிருந்து மீள்விக்கப்பட்டது