பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

என்பது மனத்திலுண்டாகும் ஒரு கிளர்ச்சியென்னில் அக்கிளர்ச்சி நிலையுடையதா அல்லவா என்ற வினாவை யெழுப்புதலே முறையுடையதாகும். மனதில் உண்டாகும் கிளர்ச்சிகள் சார்ந்ததின் வண்ணத்தாகும் மனதினால் வேறுபட்டுக்கொண்டு செல்வதை நாம் உணர்கின்றோம். ஆனால் மனத்தில் அழுத்தமாக தைத்த ஒரு கிளர்ச்சி அதனை அடிக்கடி எண்ணச் செய்து விடுகின்றது என்பதனையும் நாம் உணர்கின்றோம், ஒன்றை நிகழ்த்துங்கால் உண்டாகும் கிளர்ச்சியை இன்பம் எண்ணில் பின் அதனைக் குறித்து எண்ணுவதாலுண்டாகுங் கிளர்ச்சியை இன்பத்தின் நிழல் எனலாம். இன்பத்தின் நிலையுடைமை அதன் வன்மையைப் பொறுத்தது என்றே விடையிறுக்க வேண்டும்.

ஆதலால் இன்பத்தை அடைய விரும்பும் ஒருவனுக்கு முதற்கண் பகுத்தறிவும் அறிந்தபடியொழுகும் மனவலிமையும், தான் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்றதாய்த் தன் நிலைக்குப் பொருத்தமானதாயுள்ள ஒரு குறிக்கோளும், அக்குறிக்கோளை அடையத் தன் உழைப்பையும், பொருளை யும் இறுதியில் வேண்டப்படின் உயிரையும் இழத் தற்கேற்றதாய் நிகழ்த்தும் போராட்டமே வேண்டற்பாலது.

திராவிட நாடு
29-4-1945