பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46

பலருக்கும் ஏன்! மிருகங்களுக்கும் தக்க சமயத்தில் உதவிசெய்யும்போது மனத்தில் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று சொல்லலாம், அதை நான் அறிவேன் அதே திருக்குறளில் ”உண்மை பேசுதலே சிறந்த அறம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆகவே, அறத்தால் இன்பம் தோன்றுகிறது. ஆனால் அறத்திலே சிறந்த அறமாகிய உண்மை பேசுவதிலேதான் சிறந்த இன்பம் இருக்கிறது என்பது என்கருத்து, மற்ற வகைகளில் தோன்றுகிற இன்பமெல்லாம் சில விநாடி, சில மணி, சில மாதம், சிலவருடங்கள் தாம் இருக்கும். உண்மையைச் சொல்லுவதால், பேசுவதால் உண்டாகக்கூடிய இன்பமோ நிலைத்திருக்கக்கூடியது. எந்த விஷயத்திலும் உண்மையைப் பேசுகிறவர்கள் மனத்தில்தான் அழியாத இன்பம் நிலைத்திருக்கும். நன்றாகக் கவனியுங்கள்! வீரன், படிப்பாளி, பேச்சாளி, முதலாளி, பணக்காரன், கலெக்டர், கவர்னர் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள்! பிறகு உண்மை பேசுகிறவன், உண்மை பேசுகிறவன் உண்மைபேசுகிறவன் என்று சொல்லிப்பாருங்கள். எந்தச்சொல்லிலே உயர்வு தோன்றுகிறதென்பதை நிதானமாகக் கவனியுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சொல்லுவீர்கள் உண்மைபேசுகிறவன் என்னும் வார்த்தையிலேதான் உயர்வு இருக்கிறதென்று! உண்மையில்தான் இன்பம் இருக்கிறது.