பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57

பித்தாள். முதலியார் இதற்கெல்லாம் இரங்குபவரா என்ன! “மாங்கல்யம் போகாமலிருக்கக் கோயிலைச் சுற்று” எனக் கூறிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார். சின்னாட்களிலே நீலாவின் கணவன் இறந்தான். நெஞ்செலும்பு நொருங்கி நீலாவின் கணவன் இறக்கிறான். வடிவேலு முதலி வளமாக வாழ்ந்து இன்பத்தில் புரளுகிறான். இதுதானே இன்றைய இன்பத்தின் நிலை.

முதுகெலும்பு முறிய முறிய, இரத்தத்தின் சத்து வியர்வையாக வெளிப்படத், தோல் காய்ப்பேற ஆலையிலே வேலை செய்யும் ஆயிரம் பேரின் உழைப்பினால்தானே ஆலையின் சொந்தக்காரன் ஆறடுக்கு மாளிகையிலே ஆடம்பரமாய் வாழ்கிறான் துன்பக் கேணியிலே ஆயிரவரைத் தூர்த்து, இவன் இன்ப ஏணியிலே ஏறுகிறான். உருமாறிப் போகுமளவுக்கு உழைத்து அலுக்கிறான் உழவன். காலில் நகம் முளைத்த நாள் முதலாய் அவன் கண்டதெல்லாம் கலப்பையும் கஞ்சிக் கலயமும் தவிர வேறில்லை. மழையிலே நனைந்து, குளிரிலே நடுங்கி, வெப்பத்திலே வெந்து, அவனை வறுமை வதைக்க அவன் குழந்தைகளைப் பிணிபிய்க்க, அவன் உழைத்த உழைப்பை, அறுவடைக்காலத்திலே ஆனந்தித்து இன்பமடைகின்றான் சுகபோகியாகிய வேறொருவன். பலரின் இரத்தத்தையும் சதையையும் கொண்டுதானே பிறிதொருவன் இன்பமடைகிறான், இறைச்சித் துண்டுகளைத் தின்று இன்புறும் கழுகுக் கூட்டத்தைப்போல!