உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தனது ஐந்து மக்கள் களத்திலே மாண்டது கூடக் கவலையைத்தரவில்லையாம் ஒரு இத்தாலிய மாதுக்கு. தன் நாட்டைப் பிடித்திருந்த பாசிசப் பீடை, முசோலினியின் சவம் மிலான் நகருக்கு வந்துள்ளது எனத்தெரிந்தும் இறந்துபோன பிரேதம் என்பதை கூட எண்ணிப் பாராமல் அதனைச்சுட்டாள் மீண்டும் சுட்டாள். மீண்டும் மீண்டும் சுட்டாள். நாட்டின் நாகரிக வாழ்வைச் சிதைத்த அப்பாசிஸ்டுப் பகைவனை வஞ்சந்தீர்ப் பதைத்தான் இன்பம் எனக்கொண்டாள். கிடைக்க வேண்டிய, அவசியமான உரிமையைக் கொடு என்று கேட்ட லெனின் கிராடுத் தொழிலாளர் பலரைத் தனக்கிருக்கும் அதிகார ஆணவத்தால் சுட்டுக்கொன்ற ருஷ்ய அரசன் ஜாரையும், அவன் வம்சவாரிசுகளையும், புரட்சி நடந்தபோது, வரிசையாக நிறுத்தி வைத்துப், பைத்தியம் பிடித்த நாய்களைச்சுடுவது போலச் சுட்டுக்கொல்வதைத்தான் ருஷ்ய மக்கள் “இன்பம்” என மகிழ்ந்தனர். தனிப்பட்ட ஆணோ,பெண்ணோ எவராயினும் சரி,அவன் அல்லது அவள் பரந்து கிடக்கும் மானிடக் கூட்டத்தின் ஒருபகுதிதான். அந்தமுறையிலே இன்பத்தை ஒரு கூட்டம், ஒரு இனம் அல்லது ஒருவர்க்கம் கூட்டாகத்தான் அனுபவிக்க முடியும். அதைத்தான் இன்பம் எனக் கூறவும் முடியும். அவ்வாறின்றேல் ஆட்டின் உயிரைக்கொண்டு இன்பமடையும் ஓநாய் போல்தான் இருக்கமுடியும் அவ்வின்பம். அதை இன்பம் எனக் கொள்ளவும் முடியாது.