பக்கம்:இன்ப வாழ்வு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இன்ப வாழ்வு


விட்டுப் பெயர்ந்தது. சுருங்கக் கூறின், செயலற்றவளாகக் காணப்பட்டாள் அவள், ஏன்? சென்ற காதலர் இன்னும் மீளவில்லையே! அவர் வருவதாகக் குறித்துச் சென்ற பருவமும் கடந்து விட்டதே! இனி எப்பொழுது வருவாரோ? போருக்குச் சென்ற இடத்தில் என்ன நேர்ந்ததோ? நாம் இங்கே இங்ஙனம் இன்னும் எத்துணை நாட்கட்குத் தனித்துப் புலம்புவது? அவர் வெற்றியுடனும் உயிரோடும் திரும்பி வரவேண்டுமே! என்ற எண்ண அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அலைக்கத் தொடங்கின. கற்புமிக்க பெண்டிரின் இலக்கணமும் இதுதானே!

தலைவியின் கலக்கமுற்ற நிலையை உயிர்த்தோழி கண்டாள். பெரிதும் கவன்றாள். தலைவியின் கவலை என்று தீருமோ என்று எண்ணி நொந்தாள். கவலற்க என்று அவளுக்கு ஆறுதல் கூறித் தேறுதல் செய்யலானாள். என்ன செய்யினும் யாது பயன்? சென்ற தலைவர் மீண்ட போதன்றோ மேனி பொலிவு பெறும். தலைவி தன் உடல் வேறுபாட்டைக் கண்டு கவன்ற தோழிக்குப் பின்வருமாறு தன் உண்மை நிலையை உரைக்கலானாள்:

“என் அருமைத் தோழியே! என் காதலருடன் இனிது வாழும் போது உண்டாகும் உவகை மிகப் பெரியதாகும். அவ்வுவகையின் மிகுதியை, எடுத்துக் காட்டொன்றால் இயம்பி விளக்குகின்றேன், கேள்: ஒர் ஊர்; தள்ளா விளையுள் தங்கப் பெற்றது. தக்கார் உறையும் தகுதி உடையது. தாழ்விலாச் செல்வர் வாழும் சிறப்பு மிக்கது. அத்தகைய ஊரில் திருவிழா ஒன்று நடக்கின்றது. அது போழ்து அவ்வூர் பெற்றிருக்கும் விளக்கம் விளம்பும் தன்மையதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/103&oldid=550670" இலிருந்து மீள்விக்கப்பட்டது