பக்கம்:இன்ப வாழ்வு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

105


ஆனால் இங்கோர் ஐயத்திற்கும் இடமுண்டு. மக்கள் பயிலுகின்ற வீடுகளின் முற்றத்திலும் அணிற்பிள்ளைகளைக் கண் கூடாகக் காண்கின்றோமல்லவா? அங்ஙனம் இருக்க ‘மக்கள் போகிய அணிலாடு முன்றில்” என்று புலவர் பாடியிருப்பது பொருந்துமா? அதில் என்னதான் சிறப் புள்ளது? என்ற கேள்வி இங்கு எழும். உண்மை அப்படியன்று. இங்கே புலவர் எழுத்தெண்ணிப் பாடி யுள்ளார். ஊன்றி நோக்குவோர்க்கே உண்மை புலப்படும். மக்கள் பயிலுகின்ற வீட்டு முற்றத்திலும் அணில்களைக் காணமுடியும் என்பது உண்மையே. ஆயினும், அங்கு அணில்கள் ஒடுவதைக் காணமுடியுமே தவிர எஞ்ஞான்றும் விளையாடுவதைக் காணமுடியாது. மக்கள் பயிலும் இடத்தில் இரை தேடுவதற்காகச் சற்றே ஒட முடியுமே தவிர, எஞ்ஞான்றும் விளையாடிக் கொண்டிருக்க முடியா தல்லவா? இதனை “வரிப்புற அணிலொடு கருப்பை (எலி) ஆடாது’ என்னும் பெரும்பாணாற்றுப் படை (85) அடியானும் உணரலாம். ஆடும் என்ற சொல்லால், மக்கள் பயிலாத வீடு என எளிதின் உணரலாம். இங்ஙனம் ஆடும் முன்றில் என்று பாடாமல் ஒடும் முன்றில் என்று பாடி யிருப்பாரே யானால் இத் தொடரில் ஒரு சிறப்பும் இல்லையாம்; இத்தொடரினையும் இப் புலவர்க்குப் பெயராக வைத்திருக்க முடியாது. மற்றும் முன்றிலில் குழந்தைப் பிள்ளைகள் விளையாடுவதையே அனைவரும் எதிர்பார்ப்பர். இங்கு அதற்கு மாறாக அணிற் பிள்ளைகள் ஆடுவதாகக் கூறப்பட்டிருப்பது படிப்பவரின் உள்ளத்தைத் துணுக்குறச் செய்து கருத்தூன்றவும் செய்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/106&oldid=550674" இலிருந்து மீள்விக்கப்பட்டது