பக்கம்:இன்ப வாழ்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் ஏர் உழவன்

ஒர் அழகிய மாளிகை. மாளிகைக்குரிய மங்கையும் மணவாளனும மகிழ்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். மணவாளன், மங்கை ஏமாறும் செவ்வியை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். வேற்று நாடு போந்து மிக்க பொருளீட்டி வரவேண்டும் என்பது அவனது வேணவா. ஆனால் மனைவி உடன்படுவாளோ மாட்டாளோ என்பது அவனுக்கு ஐயம். இருப்பினும் தக்க செவ்வி நோக்கித் தன் கருத்தை வெளியிட்டான். கேட்ட அவள் சிறிது பின் வாங்கினாள். ‘தங்கள் பொருள் வேட்கைக்குக் காரணம், என் மேல் அருள் வேட்கையின்மையே போலும். தங்களைப் பிரிந்து யான் வாழ்வதெப்படி? எனக்கு உயிர் தாங்களே யன்றோ? உயிர் பிரியும் உடலுக்கு மதிப்பென்ன உள்ளது?’ என்று இரங்கத் தக்க நிலையில் பதிலிறுத்தாள். அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. சற்று நேரம் வாளா இருந்தான். பின்பு, விரைவில் திரும்பி விடுவேன் என்று அன்பு கனிய அவளுக்கு ஆறுதல் கூறினான். அவளும் உடன்பட்டாள். ஆனால், தாங்கள் மீண்டு வரும் காலம் எது? என்று வினவினாள். கார் காலத்தில் வந்து விடுவேன்; இது திண்ணம் என்று காலவரையறை கூறி உறுதியும் செய்தான் அவன். அவளோ, அங்ஙனமே தாங்கள் குறித்த காலத்தில் திரும்பி விட வேண்டும்; கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/108&oldid=550676" இலிருந்து மீள்விக்கப்பட்டது