பக்கம்:இன்ப வாழ்வு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இன்ப வாழ்வு


மைந்தனும் பிறந்தான். சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து தத்தடியிட்டுத் தாய் தந்தையரை இன்புறச் செய்தான். குந்தியும் குறுகுறு நடந்தும் உள்ளத்தைக் குளிரச் செய்தான். கையாலடித்தும் காலாலுதைத்தும் களிக்கச் செய்தான். உண்ணும் உணவைத் துழவிப் பிசைந்து தன் மேலும் தாய் மேலும் தந்தை மேலும் பூசிப் பூரிக்கச் செய்தான். யாழினும் இனிய-குழலினும் இனிய தன் மழலை மொழிகளால் உளத்தை மகிழச் செய்தான். பெற்றோர் இருவரும் பிள்ளையால் பெறக் கூடிய இப்பேரின்பப் பெருவாழ்வில் மூழ்கித் திளைத்தார்கள். பிள்ளையில்லாதோர் வாழ்க்கை நலமில்லையல்லவா? அவர்கட்கு இவ்வுலகில் இன்பந்தான் ஏது? இசைதான் ஏது? ஒன்றும் இல்லையெனப் பெரியோர் பலரும் கூறியுள்ளனரே.

>}: >k 米

அக்காலை அவன் நடத்தையில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவன் அவளிடம் இருந்த பழைய அன்பை நெகிழவிட்டான். அடுத்த தெருவில் உள்ள அயலாள் ஒருத்தியைக் காமுற்றான். அங்கு அடிக்கடி சென்று வருவதையும் வழக்கமாகக் கொண்டான். குடும்பத்தில் சிறிதும் கருத்தில்லை. விருந்தினன் போல் ஏதோ ஒரு நேரம் வருவான். உடனே திரும்பி விடுவான். குடும்பத்தில் வருவாய் குன்றத் தொடங்கிற்று. கூடிய விரைவில் குடும்பமே நொடித்து விடும்போலத் தோன்றியது. ஊரார் பலரும் பலபடப் பேசிக் கொண்டனர். இவையெல்லாம் இயற்கை தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/125&oldid=550695" இலிருந்து மீள்விக்கப்பட்டது