பக்கம்:இன்ப வாழ்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

19


குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் முழுக்க முழுக்க இன்பத்துறை பற்றியனவே. பரிபாடலிலும் இதற்குக் குறைவில்லை. பத்துப் பாட்டு நூற்களுள், குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு, நெடுநல் வாடை என்னும் முன்றும் முற்றிலும் இத்துறையினவே. கீழ்க்கணக்கு நூற்களுள், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழியைம்பது. ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூற்கள் அகப்பொருள் பற்றியனவே. மற்றும் திருக்குறள், நாலடியார், இன்னிலை என்னும் முன்று கீழ்க்கணக்கு நூற்களில் காமத்துப்பால் என்னும் ஒரு பகுதி தனியே அமைக்கப் பெற்றுள்ளது. இவையெல்லாம் முற்காலம் எனப்படும் சங்க காலத்தைச் சார்ந்த நூற்களாகும். அதாவது ஆறாம் நூற்றாண்டுக்கு முன் எழுந்தவைகள் இவ்விலக்கியங்கள் என்று ஒரு தோற்றமாகச் சொல்லலாம்.

அடுத்து, ஆறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான இடைக்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் இன்ப வாழ்வியல் பெருவாரியாகப் பேசப்பட்டுள்ளது. இவ்விடைக்கால நூற்கள் பெரும்பாலும் சமயச் சார்புடையனவாக - கடவுள் நெறிபற்றியனவாக இருப்பினும், இவற்றுள்ளும் இன்பியலுக்குக் கருப்பே (பஞ்சமே) இல்லை. திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், ஆண்டாள் முதலிய சைவப் பெரியார் களாலும், வைணவப் பெரியார்களாலும் அருளிச் செய்யப் பட்ட தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் முதலிய அருள் நூல்களிலும் இன்பத்துறை இரண்டறக் கலந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/20&oldid=514716" இலிருந்து மீள்விக்கப்பட்டது