பக்கம்:இன்ப வாழ்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனித்த கசப்பு

இனிப்பு இனிக்கத்தான் செய்யும். கசப்பு கசக்கத் தான் செய்யும். இதற்கு மாறாக இனிப்பு கசக்கவோ உவர்க்கவோ செய்யாது. கசப்பும் இனிக்கவோ புளிக்கவோ செய்யாது, ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துமா என்பது சிறிது ஐயந்தான்! கசப்பு இனிப்ப தாகவும் இனிப்பு உவர்ப்பதாகவும் சொல்லும் மக்கள் இல்லாமற் போகவில்லை. இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ் வியத்தகு மாந்தர் யாவர்? சில நோயாளிகளும் நஞ்சு தீண்டப்பட்டவர்களுமே அவர்கள். இவ்வன்மை, நோய்க்கும் நஞ்சிற்கும் உண்டு போலும்? ஆனால் அவனுக்கோ நோயும் இல்லை; நஞ்சு தீண்டவும் இல்லை. இருப்பினும் அந்த வியத்தகு செயலுக்கு ஆளானான் அவன். அவன் யார்? அப்படி ஆனதற்குக் காரணம் என்ன?

பறம்பு மலைச்சாரல்; நல்லாண்மகன் ஒருவன்; திண்ணிய தோளன். பரந்த மார்பன். நிமிர்ந்த நடையன்; வேட்டை விருப்பன்; வில்லேந்திய கையன்; சாரலின் இரு பக்கங்களையும் மாறி மாறி நோக்கிச் சென்றான். சென்றவன் தன் குறிப்புக்கு மாறாக வேறொன்று கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/96&oldid=550827" இலிருந்து மீள்விக்கப்பட்டது