பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சுந்தர சண்முகனார்


பரதன், இராமனின் அடிகளைச் (பாதுகைகளைச்) சுமப்பதைத் தவிர, மண்ணுலகைக் காக்கும் சுமை தொடர்பான முடியைத் தலையில் சுமக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டானில்லை - என்பது இப்பாடலின் கருத்து.

இந்தப் பாடல் நேரிசை ஆசிரியப்பா. இப்படியாக, ஆசிரியப்பாவால் ஆன இராமாயணம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது என்ற செய்தி அறியக்கிடக்கிறது.

இந்த ஆசிரியப்பா இராமாயணத்தை மு. இராக வையங்கார் ‘பழைய இராமாயணம்’ எனக் குறிப்பிட்டிருப்பதால், இது கம்ப இராமாயணத்திற்கும் முற்பட்டதாய் இருக்கலாம் போலும். 

16. தமிழன் கண்ட கல்வி முறை

இக்காலக் கல்வி முன்னேற்றம்

இன்று, மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் முதலிய துறைகள் வளர்ச்சி பெற்றிருப்பதைப் போலவே கற்பிக்கும் (போதனா) முறையும் வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய புதிய முறைகள் பல தோன்றியுள்ளன. விளையாட்டு முறை, கிண்டர் கார்டன் முறை, மாண்டிசோரி முறை, தன்னோக்க முறை. தனிப் பயிற்சி முறை, ஆதாரக் கல்வி முறை என்றெல்லாம் அவைகட்குப் பெயரும் சூட்டியுள்ளனர். குழந்தைகளின் இன்னல்கள், உளவியல்பு முதலியவற்றை அறியாமல், குழந்தைகட்குப் புரிகிறதோ புரியவில்லையோ, அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, எப்படியேனும் திணிக்க வேண்டும் என்ற முறையில் அக்காலக் கற்பிக்கும் முறை அமைந்திருந்ததாம். அதை மாற்றி மேற்கண்ட முறைகள் வாயிலாக மாணவர் உள்ளத்திற்கேற்ப அவர்களே