பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

121


குடிமக்களாக விளங்க வேண்டும் என்பதற்காகக் குடிமைப் பயிற்சியைப் (Citizenship) பாடமாக்கியுள்ளனர். பெண்கட்குச் சமையற்கலையைக் கூடப் பாடமாக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பாடங்கள் வாயிலாக இவற்றைப் புகுத்த வேண்டிய (injection) நிலை அன்று ஏற்படவில்லை. பழக்க வழக்கங்களிலும் உடையிலும் நாட்டுக்கு அயலார்போல் வீட்டுக்கும் அயலாராய் இன்றைய படித்த இளைஞர்கள் இருப்பதுபோல் அன்று இருந்ததில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று போற்றிய காலம் அக்காலம். ஆசிரியரைப் பழிப்பதையும் எதிர்ப்பதையும் நாகரிகமாகக் கருதுவதே இக்காலக் கல்வி முன்னேற்றமாகும். கல்லூரி வேலை நிறுத்தம் அதாவது படிப்பு நிறுத்தம் அடிக்கடி நடைபெறுவதற்குக் காரணம் ஆசிரியனை இறைவனாகக் கருதும் மனப்பான்மை இல்லாததே யாகும்.

“நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர்
வணங்கி வலங் கொண்டு வந்து”.

என்ற சிறு பஞ்ச மூலக் கருத்திற்கிணங்க மனப்பான்மை வளர்ந்தால் இந்த நிலை மாறும்.

அன்று திருமணம் முதலிய நல்ல நிகழ்ச்சிகளில் ஆசிரியர்க்கே முதலிடம் கிடைக்கும். இன்று அரசியல் தலைவர்கட்கும் உயர்தர அதிகாரிகட்குமே முதலிடம் கிடைக்கின்றது. அரசியலுக்கும் புதவிக்கும் கிடைக்குமிடம் இனியேனும் கல்விக்குக் கிடைக்குமென நம்பமுடியுமா?

கணிதச் சிறப்பு

இப்படியாகப் பழங்காலக் கல்வி முறையில் பல நல்ல நடைமுறைகள் இருந்ததல்லாமல், பாடத் திட்டத்திலும் சில சிறந்த பகுதிகள் இருந்தன, அவற்றுள் தலை சிறந்ததாகத் தமிழ்க் கணக்கைக் கூறலாம். தமிழில் என்ன இருக்கிறதென்று கேட்பவர்கள்கூட, தமிழ்க் கணிதத்தைச்