பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

125


அக்காலத்தில் பின்பற்றப் பட்டு வந்தன. இவை போன்றவற்றை இக்காலத்தினர் ‘புறவினைச் செயல்கள்’ (Extra curricular Activities) என்று ஆடம்பரமாக (படாடோபமாக) அழைக்கின்றனர். இப்படி இன்னும் பல சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் கலையறிவு, நூலறிவு, நல்ல உழைப்பு, நல்ல பழக்கவழக்கங்கள் எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை முதலியவற்றையே அக்காலக் கல்வி புகட்டியது. இன்றைய ஐரோப்பியக் கல்வி, ஆடம்பர வாழ்க்கை, பெரிய மேதை போன்ற செருக்கு மனப்பான்மை, கையூட்டு, உடலுழைப்பில் வெறுப்பு இவற்றைத் தானே உண்டாக்கியுள்ளது? ஆசிரியர் மாணவர் பிணைப்பும் மளிகைக்கடைத்துறை போல் ஆகிவிட்டதல்லவா? இப்பொழுது எளிய வாழ்க்கை, சமூகத்தொண்டு, குடிமைப் பயிற்சி, முதலியவற்றின் வாயிலாகப் பழைய நிலைமைக்குக் கல்வித் தரத்தைக் கொண்டுவர வேண்டும் என்று.. கரடியாகக் கத்துகின்றனர். அன்று தமிழன் கண்ட கல்வியின் தரம் தாழ்ந்து விடவில்லையே!

குறையும் நிறையும்

ஒரு குறைபாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்றுள்ள குழந்தை உள நூலும் (Child Psychology) கல்வி உளநூலும் (Educational Psychology)அன்று எந்த நாட்டிலும் தோன்றியிருக்கவில்லை. அதனால் சிலகுறைபாடுகள் பயிற்றலில் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தாலும் “கொள்வோன் கொள்வகையறிந்து அவன் உளங்கொள” நூல் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பதற்கு, பதின் மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூல் பாயிரம் சான்றாக நிற்கின்றது. அது வருமாறு:-