பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

சுந்தர சண்முகனார்


காண்டிகை உரைகாரர் ஆகியோருமே, இறந்தது தழீஇய எச்சம், எதிரது தழீஇய எச்சம் என்னும் எச்சப் பெயர்களை அறிமுகம் செய்துள்ளனர். மற்ற உரையாசிரியர்கள் இதுபற்றிப் பேச்சு மூச்சு காட்டவில்லை.

முன்பெல்லாம் கூட்டங்களில் பேச்சாளர்களேயன்றித் தலைவர் ஒருவர் இருப்பார். இப்போது முன்னிலை வகிப்பவர் என ஒருவர் முளைத்துக் கொண்டுள்ளார். வாழ்த்துரையாளரும் வரவழைக்கப்படுகிறார். இம்மூவருள், முதலில் முன்னிலையாளர் வந்து விட்டார். முதன்மையாகத் தலைவரை எதிர்நோக்கியுள்ளனர். தலைவரும் வந்து விட்டார். உடனே, கழகத்தார்கள் தலைவரும் வந்து விட்டார் எனக் கூறுகின்றனர். இங்கே தலைவரும் என்பதில் உள்ள உம், முன்னால் நடந்துவிட்ட (இறந்து விட்ட) முன்னிலையாளரின் வருகையைத் தழுவுகிறது. எனவே, தலைவரும் என்பதில் உள்ள ‘உம்’ இறந்தது தழீஇய (தழுவிய) எச்ச உம்மை எனப்படுகிறது.

வாழ்த்துரையாளர் வராத நிலையில், தலைவர் வந்து விட்டாராயின், தலைவரும் வந்து விட்டார் என்று கூறின், தலைவரும் என்பதில் உள்ள உம், இன்னும் வாழ்த்துபவர் வரவில்லையே என எதிர்காலத்தில் வர இருக்கிற வாழ்த்துரையாளரைத் தழுவுவதால் எதிரது தழீஇய எச்ச உம்மை எனப்படுகிறது.

தலைவரும் வந்து விட்டார் என்பதில் உள்ள ‘உம்’ இரண்டையும் தழுவுவதாகவும் கூறலாம். அதாவது-முதலில் முன்னிலையாளர் வந்து விட்டார் என்ற இறந்த காலத்தையும், இன்னும் வாழ்த்துபவர் வரவில்லை என்ற எதிர்கால நிகழ்ச்சியையும் தழுவுவதால், இந்த உம்மை, இறந்ததும் எதிரதும் தழுவிய எச்ச உம்மை என்றும் கூறலாம்.