பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

11


காதில் ஒலிப்பதுபோல் கற்பனையின் தெரிகிறது. சிலர் வீடுகளில் வரவேற்பாளர் நாய்தான். வீட்டின் ஓரமாகத் தெருவில் சென்றாலுமே அந்த வரவேற்பு கிடைக்கும். இவர்களிடம் இன்சொல்லை எவ்வாறு எதிர்பார்ப்பது? சிலர் வீடுகட்குச் செல்பவர்கள், நாய் இருக்கிறதா?-என்று ‘பயபக்தியுடன்’ கேட்டுவிட்டு, நாய் இல்லை என்ற பதில் வந்த பின்னரே உள்ளே காலடி எடுத்து வைப்பது மரபாயுள்ளது. நாயைக் கட்டி வைத்துவிட்டோம்-அஞ்சாமல் வரலாம்-என்ற பதில் வந்த பின்னரும், குலை நடுக்கத்தோடு உள்ளே மெள்ள-மெள்ளச் செல்பவர்களும் உண்டு, ஈண்டு, “ஆசு இல் தெருவில் நாய் இல் வியன்கடை (271) என்னும் குறுந்தொகைப் பாடல் பகுதி எண்ணத்தக்கது.

இன்சொற்கள் இருக்க அவற்றைப் பயன்படுத்தாமல், சிலர் வன் சொற்களைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டுவது எதற்கு என்று காரணம் தெரியாமல் திருவள்ளுவர் திகைக்கிறார். கனிந்த சுவையான் இனிய கனிகள் இருக்க அவற்றை உண்ணாமல், முற்றாத-இனிப்பு ஏறாத துவர் உள்ள காய்களைப் பறித்துத் தின்பவர்க்கும் இந்த வன்சொலாளர்க்கும் வேறுபாடு இல்லை என எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். அந்த எண்ணத்தின் வெளியீடாக,

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

என்ற குறட்பா எழுந்தது. திருவள்ளுவர் இதற்கு ‘இனியவை கூறல்’ என்னும் தனித் தலைப்பு தந்து பத்துப் பாக்கள் செலவழித்துள்ளார். அவற்றுள் ஒன்று தான் மேற்கூறிய பாடல்.

உள்ளம் மகிழ்ந்து ஒன்று உதவ இயலாவிடினும், முகம் மலர்ந்து இன்சொல் வழங்குவது எவ்வளவோ மேலானது என்பது வள்ளுவர் கருத்து.