பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சுந்தர சண்முகனார்


“எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
(பாலகாண்டம்-மிதிலைக் காட்சிப் படலம்-35)

இந்தப் பாடலில், ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதில் உள்ள உம்மை, சீதையும் நோக்கினாள் என்பதைத் தழுவுகிறது. ‘அவளும் நோக்கினாள்’ என்பதில் உள்ள உம்மை, இராமனும் (அண்ணலும்) நோக்கினான் என்பதைத் தழுவுகிறது. இவ்விரண்டனுள் முன்னால் நடந்த இறந்தது எது? - பின்னால் நடந்த எதிரது எது? இல்லை-இறந்ததோ எதிரதோ இல்லவேயில்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் அண்ணலும் - அவளும் என்ற உம்மைகள் நிகழ்வது தழீஇய எச்ச உம்மைகளாம்.

சிலர், ‘இடமுன்-கால முன்’ என்னும் கரடி விட்டு இந்தக் கருத்தைக் குலைக்கப் பார்க்கலாம். இங்கே எந்த முன்னும் எந்தப் பின்னும் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இவற்றை ‘நிகழ்வது தழீஇய எச்ச உம்மை’ என்று கூசாது கூறலாம். இந்தக் கட்டுரையின் பொருள் இஃதே! 

19. ஆசானின் அன்புரை -
நன்னூல் நவில்வது

மாணாக்கர் சிலர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வரும் இந்தக் காலத்தில், வகுப்பின் கடைசி வரிசையில் சிலர் அமர்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் பொழுது போக்கும் இந்தக் காலத்தில், சிலர் ஆசிரியரைக் கேலிப் பொருளாக எண்ணி எள்ளி இகழ்ந்து