பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

145


போல் வகுப்பிலும் கலவரம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர், என்னே ஆசிரியர் - மாணவர்தம் அன்பு நிலை! ஆனால் ஒரு சில மாணவரிடமே இக்குறை காணப்படுகின்றது. இத்தீய பழக்கம் அறவே கூடாது. பண்டைக் காலத்தில், ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அகங்கனிந்து அன்பு ததும்ப நடந்து கொண்டது போலவே, இக்காலத்திலும் நடந்துகொள்ள வேண்டும். அதுவே சிறந்த நய நாகரிகமாகும்.

அடக்கமும் வழிபாடும்

மாணவர் சிலர், ஆசிரியர்க்கு அடங்காமல் நடப்பதைப் பெருமையென்றெண்ணிச் சிறுமை உறுகின்றனர். பெரியோர்க்கு அடங்கி நடப்பதே பெருமையாகும். அட்ங்காமையால் வரும் கேடுகள் பல,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்பது குறளன்றோ?

வழிபாடு

ஆசிரியர்க்கு அடங்கி அவரை வழிபட்டுக் கற்க வேண்டும். குளிர் காய்பவன் நெருப்பை மிக நெருங்கின் சுடும்; மிகவும் எட்டிச் சென்றாலும் குளிரும்; ஆதலின் நடுத்தரமான இடத்திலிருந்தே குளிர் காய்வான். அதுபோலவே, மாணவரும் ஆசிரியரும் அளவு மீறி நெருங்கிப் பழகினால் மதிப்புக் கெடும்; அளவு மீறிப் பிரிந்து நின்றாலும் அன்பு கெடும்; ஆதலின் நடுத்தரமாகவே பழக வேண்டும். ஆனால் நிழல்போல் விடாது அவரை அடுத்திருக்க வேண்டும். ஆசிரியர் எவ்வெவ்விதத்தில் மகிழ்வாரோ அவ்வவ்விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் நெறி தவறாது நிற்கும் நிலைக்குத்தான் வழிபாடு என்று பெயராகும்.