பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சுந்தர சண்முகனார்



“அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்” (92)

இது குறள்

சிலர் ஒருவகையான இன்சொல் இயம்புவார்கள்: தம்பி சாப்பிடு என்றால் எதுவும் சாப்பிடாது; தம்பி கையில் எது இருந்தாலும் கேட்டால் கொடுத்து விடும் - என்ற மாதிரியில் இன்சொல் கூறி, இருப்பதைப் பறித்துக் கொண்டு, வாய்ப்பேச்சால் குளிப்பாட்டி அனுப்பி விடுவார்கள்.

இன்னும் சிலர், வந்திருப்பவரைப் பார்த்து ‘இவன் எப்போது எழுந்து போய்த் தொலைவான்’ என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருப்பார்கள். வந்தவர் ஒரு விதமாக விடைபெற்று வெளிவாயிற்படியண்டை போன பிறகு, காஃபி சாப்பிடாமல் போகிறீர்களே - என்ன சாப்பிடுகிறீர்கள்? சர்க்கரை போடலாமா? டிக்கேழ்சன் லைட்டா இருக்கவேண்டுமா? காஃபி பிடிக்காவிடின், ஆர்லிக்சாவது - போர்ன் விட்டாவாவது சாப்பிடலாமா? எதுவும் பிடிக்காவிடின் வெறும் பாலாவது சாப்பிடலாமா? - என்று அடுக்கிக் கொண்டே - நகர்ந்து கொண்டே வழியனுப்புவார்கள். இவர்கள் எப்படி ஏமாற்ற முயன்றாலும், எப்படியாவது வாங்கிப் பருகிவிட்டுச் செல்லும் பேர்வழிகளும் உண்டு, காஃபி சாப்பிடுகிறீர்களா-என்று ஒப்புக்காவது கேட்கும் பண்பும் ஒருவகையில் பாராட்டுக்கு உரிய இன்சொல்லே.

சில இடங்களில், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டாலேயே - ‘போச்சு’ - ஒன்றும் கொடுக்க மாட்டார்கள்-என்பது பொருள். உண்மையில் கொடுப்பவர் என்றால், கேட்காமலேயே காஃபி வந்து விடுமே. சிலர் காஃபி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால், சீக்கிரம்