பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சுந்தர சண்முகனார்


பொறுத்த மட்டிலும் அப்படியிருக்க முடியாது. இருப்பதும் அறிவுடைமையாகாது. ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவன் எல்லாம் உடைய செல்வர் முன்பு குழைந்தும் பணிந்தும் நின்று ஒன்றைக் கேட்டு வாங்குவான். அது போலவே மாணவரும் ஆசிரியர் முன்பு பணிந்து நின்று பாடங்கேட்க வேண்டும். அவரே சிறந்தவராவர். மேலும் ஆசிரியர்க்குப் பொருளும் கொடுத்து உதவலாம். ஆனால், நன்மை ஒன்றும் செய்யாவிடினும் தீமையாவது செய்யாமல் இருப்பது நல்லது. மற்றும், தாம் ஒன்றும் இல்லாத ஏழையாய் இருப்பின் பிச்சையெடுத்தாயினும் கற்க வேண்டும். இங்ஙனமாக ஒருவரின் பின்னிற்கும் நிலைக்குச் சிறிதும் வெட்கப்படக் கூடாது. கல்வியானது அச்சிறுமைகளை யெல்லாம் மறைத்துப் பின்னால் பெரிதும் விளக்கந் தந்து பெருமைப் படுத்தும். இக்கருத்துக்களை,

“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்”

என்னும் திருக்குறளானும்,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்னும் புறநானூற்றானும்,

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கைநன்றே”

என்னும் வெற்றிவேட்கையானும் உணரலாம்.

திருக்குறளும் புறநானூறும் வெற்றி வேற்கையும் கூறும் இந்தக் கருத்தினை, பவணந்தியார், மேற்காட்டியுள்ள தமது நன்னூல் பாவில், ‘வழிபடல் முனியான்’ என்னும் தொடரால் வெளிப்படுத்தியுள்ளார். அஃதாவது, ஆசிரியரை வழிபடுவதில் வெறுப்புக் கொள்ளாதவனாய் - ஆசிரியரை வணங்குவதற்கு வெட்கப்படாதவனாய் மாணாக்கன் இருக்க வேண்டும்