பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

149


என்பது இதன் கருத்தாம். மற்றும், நாம் இவரை வழிபடுவதா - இவரை வணங்குவதா - இவருக்கு அடங்கி நடப்பதா - இவரது கட்டளைக்குப் பணிவதா - குலத்தாலும் செல்வத்தாலும் வேறு பிற தகுதிகளாலும் நாம் ஆசிரியரை விட உயர்ந்தவராயிற்றே - என்னும் மான உணர்வாகிய உயர்வு (Superiority Complex) உடைய மாணாக்கனுக்குக் கல்வி கற்பிக்க முடியாது என்னும் கருத்தைப் பவணிந்தியார் நன்னூலில்,

“தளி மடி மானி காமி கள்வன்
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே”

என்னும் நூற்பாவால் அறிவித்துப் போந்துளார். இந்நூற்பாவிலுள்ள ‘மானி’ என்பது ஈண்டு கருதற்பாற்று. எனவே, மாணாக்கர்கள் மேற்கூறிய ஒமுங்கு நெறியில் நின்று ஆசானின் அன்பைப் பெற்றுக் கல்வி கற்க வேண்டும். இனி, ஒரு நூலில் முழுப் புலமை பெறுவது எப்படி என்பதை நன்னூல் வழி நின்று காண்பாம்.

கல்விக் குழந்தை

இங்குக் கல்வியை ஒரு குழந்தையாகவும் அதனைக் கற்கும் மாணவனைத் தாயாகவும் ஒப்பிட்டுக் கூறினால் அது சாலவும் பொருந்தும். அவ்வாறே, நல்லாற்றுார் சிவப்பிரகாச அடிகளார், தாமியற்றிய பிரபுலிங்கலீலை என்னும் நூலுள் ஓரிடத்தில், மிகவும் தெளிவாக எடுத்து இயம்பிப் போந்துள்ளார். வனவசை மாநகரத்தில், மமகாரன் என்னும் அரசனும் மோகினி என்னும் அரசியும் அரசாண்டிருந்தார்கள். அவர்கட்கு நீண்ட நாளாகப் பிள்ளையே பிறக்கவில்லை. கடிய நோன்பு கிடந்தார்கள். அதன் பயனாய்க் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை யென்றால் அரண்மனைக் குழந்தை அல்லவா? அதிலும் நீண்ட நாளாக இல்லாமல் பின்பு பிறந்த குழந்தை