பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சுந்தர சண்முகனார்


அல்லவா? ஆதலின், அக்குழந்தைக்குச் செய்யப்படும் வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள் தாயாகிய அரசி. அவள் வளர்த்ததற்கு இங்கு உவமையொன்று கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் கல்வி கற்க விரும்பிய முதல் மாணவன் ஒருவன் எங்ஙனம் தன் பாடங்களைப் போற்றி உண்ர்ந்து கற்பானோ, அங்ஙனமே அரசியும் தன் குழந்தையை அருமை பெருமையுடன் வளர்த்தார் என்னும் கருத்தில்,

“படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்றும் அதுபோல”

என அவ்வுவமை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாய் ஒருத்தி கண் விழித்தல், மருந்துண்ணல் முதலிய துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு தன் குழந்தையினை வளர்த்துக் காப்பது போலவே, மாணவர்களும் பல விதத்திலும் முயன்று கல்வியாம் குழந்தையை வளர்ச்சி பெறச் செய்யவேண்டும். அதுதான் உணர்ந்து கற்றதாகக் கருதப்பட்டுச் சுவை மிகுதியும் பயக்கும். அங்ஙனம் எவ்வெவ்விதத்தில் கல்விக் குழந்தையை மாணவத் தாய்மார்கள் வளர்க்க வேண்டும் என்பதை நன்னூல் வழி நின்று ஆராய்வோம்:

புலமை பெறுவது எப்படி ?

கற்கத் தொடங்கிய மாணவன் ஒருவன், முற்கூறியுள்ள முறைப்படியே ஆசிரியரிடம் பாடங்கேட்டுக் கொள்ள வேண்டும்; அதனோடு விட்டுவிடக் கூடாது; திரும்பவும் வீட்டில் வந்து படிக்க வேண்டும்; கேட்ட நூல்களின் கருத்தை உலக வழக்கத்தோடு ஒத்திட்டு உண்மை உணர வேண்டும்; போற்ற வேண்டியவைகளைப் போற்றி வைத்துக் கொள்ள வேண்டும் - மனப்பாடம் செய்து கொள்ள